இந்தியாவின் விளையாட்டு தலைமையிடமாக தமிழ்நாட்டை மாற்ற வேண்டும் என்பதே முதல்-அமைச்சரின் கனவு - அமைச்சர் மெய்யநாதன்
|இந்தியாவின் விளையாட்டு தலைமையிடமாக தமிழ்நாட்டை மாற்ற வேண்டும் என்பதே முதல்-அமைச்சரின் கனவு என்று விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் பேசினார்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் திருவண்ணாமலை மாவட்ட தடகள சங்கம் மற்றும் அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் 36-வது மாநில இளையோர் தடகள போட்டி இன்று தொடங்கியது.
இந்தியாவின் விளையாட்டு தலைமையிடமாக தமிழ்நாட்டை மாற்ற வேண்டும் என்பதே முதல்-அமைச்சரின் கனவு என்று விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் பேசினார்.
இதில் சிறப்பு விருந்தினராக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட கலெக்டர் முருகேஷ் ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தனர்.
அப்போது அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில்
குஜராத்தில் நடைபெற தேசிய விளையாட்டு போட்டியில் தமிழகத்தில் இருந்து 380 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று இதுவரை இல்லாத அளவிற்கு தமிழக வீரர்கள் தேசிய அளவில் 25 தங்க பதக்கங்கள், 22 வெள்ளி பதக்கங்கள், 28 வெண்கல பதக்கங்கள் என 75 பதக்கங்களை பெற்றனர். இந்தியாவிலேயே 5-வது இடத்தை பெற்று தமிழகத்தை சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் சாதனை படைத்து உள்ளனர்.
தமிழக முதல்- அமைச்சர் பொறுப்பேற்று இந்த 15 மாத காலத்தில் விளையாட்டு துறையில் பல்வேறு சாதனைகளை செய்து உள்ளார். தற்போது வரை சர்வதேச மற்றும் தேசிய அளவில் வெற்றி பெற்ற சுமார் 1330 பேருக்கு முதல்- அமைச்சர் சுமார் ரூ.36 கோடி மதிப்பில் பரிசு தொகை வழங்கி உள்ளார்.
இந்த மாநில அளவிலான தடகள போட்டியில் வெற்றி பெறுகின்ற வீரர்கள் நவம்பர் மாதத்தில் அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தில் நடைபெற உள்ள 37-வது இளையோருக்கான தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கி தருவதற்கும், விளையாட்டு கட்டமைப்புகளை உருவாக்கி தருவதற்கும் தமிழக முதல்- அமைச்சர் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவின் விளையாட்டு தலைமையிடமாக சென்னை, தமிழ்நாடு என்று மாற்ற வேண்டும் என்பதே தமிழக முதல்- அமைச்சரின் கனவு. அந்த கனவை நோக்கி நாம் அனைவரும் பயணிக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.