தகவல் பதிவு உதவியாளர், காவல் நிலைய வரவேற்பாளர் பணியிடங்கள் - 912 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கினார் முதல் அமைச்சர்
|912 பேருக்கு தகவல் பதிவு உதவியாளர், காவல் நிலைய வரவேற்பாளர் பணியிடங்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை,
பணிக்காலத்தில் காலமான காவலர்களின் வாரிசுதாரர்கள் 912 பேருக்கு கருணை அடிப்படையில் தகவல் பதிவு உதவியாளர், காவல் நிலைய வரவேற்பாளர் பணியிடங்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "காவல்துறை சார்பில் பணிக்காலத்தில் காலமான காவலர்களின் வாரிசுதாரர்கள் 912 பேருக்கு கருணை அடிப்படையில் தகவல் பதிவு உதவியாளர்/காவல் நிலைய வரவேற்பாளர் பணியிடங்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 8 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி, காவல்துறை தலைமை இயக்குநர் செ.சைலேந்திர பாபு, காவல்துறை கூடுதல் இயக்குநர் சைலேஷ் குமார் யாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.