சென்னை
தற்போதைய தேவைக்கேற்ப சென்னை ஜார்ஜ் டவுன் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் - சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அறிவிப்பு
|தற்போதைய தேவைக்கேற்ப சென்னை ஜார்ஜ் டவுன் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் என சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அறிவித்துள்ளது.
பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் சென்னையின் முக்கியமான பகுதியாக ஜார்ஜ் டவுன் இருந்தது. இங்கு பிரமிப்பூட்டும் பாரம்பரிய கட்டிடங்கள், அழகிய வடிவமைப்பை கொண்ட தேவாலயங்கள், பழைய எல்.ஐ.சி. கட்டிடம் பாரம்பரியத்தை பறைசாற்றும் பல கட்டிடங்கள், பழமைவாய்ந்த இந்து கோவில்கள் போன்றவை உள்ளன.
இங்குள்ள பழமையான கட்டிடங்கள், தெருக்கள் எந்தவித மாறுதலுக்கும் உட்படுத்தப்படாமல் அப்படியே இருந்து வருகின்றன.
தற்போதைய தேவைக்கேற்ப ஜார்ஜ் டவுன் பகுதியை சீரமைக்க ஜார்ஜ் டவுன் மறுவளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் என சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான திட்டத்தை தயாரிக்கும் பணியில் வளர்ச்சி குழுமம் ஈடுபட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக இந்த திட்டம் தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடந்தது. கூட்டத்தில் பல்வேறு துறைகளின் அதிகாரிகள், ஜார்ஜ் டவுன் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், வியாபாரிகள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.
கூட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் ஹிதேஸ்குமார் பேசும்போது, "இந்தியாவில் அமிர்தசரஸ், டெல்லி, மும்பை, அலகாபாத் ஆகிய நகரங்களில் சில பகுதிகளில் மறு வளர்ச்சி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதன் முறையாக ஜார்ஜ் டவுன் பகுதிக்கான மறுவளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் பிறகு புரசைவாக்கம், திருவல்லிக்கேணி போன்ற பழமையான பகுதிகளிலும், கோவை மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் உள்ள பழமையான பகுதிகளிலும் இந்த திட்டம் செயல்படுத்த ப்படும்" என்றார்.