மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழுவினர் இன்று ஆய்வு
|புயல் பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மத்திய குழுவினர் சென்னை வந்துள்ளனர்.
சென்னை,
மிக்ஜம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மத்திய அரசிடம் நிவாரணமாக ரூ.5,060 கோடி கோரிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழுவை அனுப்புமாறு கேட்டுக் கொண்டார். மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் கடந்த 7-ம் தேதி சென்னை வந்து, பாதிப்புகளை பார்வையிட்டு சென்றார்.
இதைத்தொடர்ந்து, மழை, வெள்ள சேதங்களை ஆய்வு செய்ய, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில், 6 பேர் கொண்ட மத்திய குழு அமைக்கப்பட்டது. நேற்று இரவு டெல்லியில் இருந்து சென்னை வந்த மத்திய குழுவினர், கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கினர்.
இன்று காலை தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்ட அதிகாரிகளை மத்திய குழுவினர் சந்திக்கின்றனர். பிறகு, 2 குழுக்களாக பிரிந்து, ஒரு குழுவினர் வடசென்னை, மத்திய சென்னை, ஆவடி, திருவள்ளூர் மாவட்ட பகுதிகளிலும், மற்றொரு குழுவினர் தென்சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகளிலும் ஆய்வு செய்ய உள்ளனர். தமிழக அரசு அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்களும் உடன் செல்லவுள்ளனர்.
நாளையும் ஆய்வு செய்யும் மத்திய குழுவினர், பின்னர் தலைமைச் செயலகம் வந்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து ஆலோசித்த பிறகு, நாளை இரவு டெல்லி திரும்புவார்கள். மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில், ஒரு வாரத்தில் இந்த குழு அறிக்கை அளிக்க உள்ளது.