< Back
மாநில செய்திகள்
செல்போன் கடையில் மத்திய உளவுப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை
சென்னை
மாநில செய்திகள்

செல்போன் கடையில் மத்திய உளவுப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை

தினத்தந்தி
|
23 Aug 2023 7:11 AM IST

சென்னை பாரிமுனை செல்போன் கடையில் மத்திய உளவுத்துறை மற்றும் கியூ பிரிவு போலீசார் அதிகாலையில் திடீர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

.சென்னை,

நாடு முழுவதும் பயங்கரவாத செயல்களை கட்டுப்படுத்த மத்திய உளவு துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இலங்கை நாட்டை சேர்ந்த நபர் ஒருவரை பிடிப்பதற்காக தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள விடுதி ஒன்றில் தங்கி இருந்த இலங்கை நபர் சிக்கினார். அவர் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டது தெரியவந்ததையடுத்து, அவர் யார்? யாருடன் தொடர்பில் இருந்தார். அவரது பின்னணி என்ன? என்பது பற்றி உளவுத்துறை அதிகாரிகள் அதிரடியாக விசாரணை நடத்தினர்.

இதில் வெளிமாநிலங்களை சேர்ந்த பலருடன் இலங்கை நபர் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. அந்த வகையில், தமிழகத்தை சேர்ந்த சிலருடன் இலங்கை நபர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருப்பது தெரியவந்தது.

இந்தநிலையில் இலங்கையை சேர்ந்தவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அடிப்படையில், சென்னையில் மத்திய உளவுத்துறை மற்றும் தமிழக கியூ பிரிவு போலீசார் இணைந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இது தொடர்பாக சென்னை பாரிமுனை 2-வது கடற்கரை சாலையில் உள்ள ராயபுரத்தை சேர்ந்த மன்சூர் என்பவருக்கு சொந்தமான செல்போன் கடையில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

நேற்று காலை 5 மணிக்கு தொடங்கிய சோதனை 7 மணி வரை 2 மணி நேரம் நீடித்தது. ராயபுரத்தை சேர்ந்த மன்சூர் மற்றும் அவரது தம்பிகளான நியாஸ், கபீர். ஆகியோர் இணைந்து இந்த கடையை நடத்தி வருகின்றனர்.

சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட இலங்கை நபர் தொடர்பாக சில தகவல்களை திரட்டுவதற்காகவே இந்த சோதனை நடைபெற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சோதனையின் போது, சில செல்போன் தொடர்புகளை அதிகாரிகள் கண்டறிந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிகாலையில் பாரிமுனை கடற்கரை சாலையில் சோதனையையொட்டி, போலீசார் குவிக்கப்பட்டதால் அப்பகுதி செல்போன் கடை வியாபாரிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்