< Back
மாநில செய்திகள்
மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்கும்-மத்திய மந்திரி ஜான்பெர்லா தகவல்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்கும்-மத்திய மந்திரி ஜான்பெர்லா தகவல்

தினத்தந்தி
|
18 Sept 2022 12:15 AM IST

ராமநாதபுரத்தில் வளர்ச்சித் திட்ட பணிகளை ஆய்வு செய்த சிறுபான்மையினர் நலத்துறை மத்திய மந்திரி ஜான்பெர்லா, மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்கும் என்று தெரிவித்தார்.

ராமநாதபுரத்தில் வளர்ச்சித் திட்ட பணிகளை ஆய்வு செய்த சிறுபான்மையினர் நலத்துறை மத்திய மந்திரி ஜான்பெர்லா, மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்கும் என்று தெரிவித்தார்.

ஆய்வு

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் நலத்துறை மத்திய இணை மந்திரி ஜான்பெர்லா, வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து ஆய்வு நடத்தினார். மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் முன்னிலை வகித்தார். அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் வீடுகள் குறித்தும், பண்ணை குட்டை அமைத்தல், புதிய குளங்கள் அமைத்தல் போன்ற திட்ட பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.. பின்னர் அவர் கூறியதாவது:-

மத்திய அரசு நிதி வழங்கும்

மாணவர்களின் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உயர்கல்வி படிக்கின்ற மாணவர்கள், வெளிநாட்டில் படிப்பவர்கள் மற்றும் பிற மாநிலங்களில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு உரிய காலத்திற்குள் கல்வி உதவித்தொகை மற்றும் கல்விக் கடன் காலதாமதம் இன்றி கிடைத்திட அலுவலர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். கல்வி வளர்ச்சிக்கு எவ்வளவு நிதி வேண்டுமானாலும் மத்திய அரசு வழங்க தயாராக உள்ளது. மாணவ, மாணவிகளின் கல்விக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். இதேபோல் மத்திய அரசின் திட்டங்கள் மக்களுக்கு முழுமையாக சென்று சேர்ந்திடும் வகையில் அனைத்து துறை அலுவலர்களும் சிறப்பாக செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் பிரவீன்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், நேர்முக உதவியாளர் சேக்மன்சூர், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் மரகதநாதன், பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் முருகன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மீனவர்களிடம் மனு வாங்கினார்

பின்னர் ராமேசுவரம் அருகே தங்கச்சி மடத்திற்கு சென்ற மத்திய மந்திரி ஜான்பெர்லாவிடம் ஒரு திருமண மண்டபத்தில் மீனவர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது அனைத்து விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதிகள் சேசு ராஜா, எமரிட், சகாயம் மற்றும் மீனவ பெண்களும் மீனவர்கள் பிரச்சினை குறித்து பல்வேறு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவித்து மீட்டு கொண்டு வரவும், இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்டு கொண்டு வரவும், இருநாட்டு மீனவர்கள் சந்தித்து பேசுவதற்கான சமாதான கூட்டத்தை ஏற்பாடு செய்யவும் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இதை பெற்று கொண்ட மத்திய மந்திரி, வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் பிரதமரையும் நேரில் சந்தித்து மீனவர்கள் பிரச்சினைகள் தீர்க்க வலியுறுத்தி நடவடிக்கை எடுக்கப்படும். தனுஷ்கோடி பகுதியில் புயலால் அழிந்து போன கிறிஸ்தவ ஆலயத்தை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இந்த கூட்டத்தில் பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் கதிரவன், மாநில செயற்குழு உறுப்பினர் முரளிதரன், சிறுபான்மை பிரிவு நிர்வாகி வேலூர் இப்ராகிம், உயர்நீதிமன்ற வக்கீல் சண்முகநாதன், தங்கச்சிமடம் குழந்தை இயேசு ஆலய பங்குத்தந்தை சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்