மத்திய அரசுதான் தமிழகத்துக்கு தண்ணீரை பெற்றுத்தர வேண்டும் - செல்வப்பெருந்தகை
|காவிரி நீர் விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜரின் 122-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை சத்திய மூர்த்தி பவனில் உள்ள அவரது சிலை மற்றும் உருவப்படத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து, செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, "காமராஜரின் பிறந்த நாள் தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. மனிதர்கள் உள்ளவரை காமராஜரின் புகழ் என்றும் நிலைத்து நிற்கும். காவிரி நீர் விவகாரத்தில், ஒழுங்காற்று குழு தமிழகத்துக்கு சேரவேண்டிய உரிமையை வழங்கவும், தண்ணீரை திறந்துவிடவும் தீர்ப்பு வழங்கி உள்ளது. ஆனால், கர்நாடக அரசு நடைமுறைப்படுத்த வில்லை. இந்த விவகாரத்தில் மத்திய அரசு என்ன செய்துக்கொண்டிருக்கிறது.
மத்திய அரசுதான் தமிழகத்துக்கு தண்ணீரை பெற்றுத்தர வேண்டும். கோர்ட்டுகளும், மேலாண்மை வாரியமும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை நடைமுறைப்படுத்த வேண்டிய இடத்தில் மத்திய அரசு தான் உள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று அவர் கூறினார்.