மதுரை
டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் - டி.டி.வி.தினகரன் பேட்டி
|டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் பேட்டி அளித்தார்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள அ.ம.மு.க. மகளிர் அணி நிர்வாகி ஜீவிதான் நாச்சியாரின் தாயார் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். அவரை நலம் விசாரிப்பதற்காக வந்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி டெல்டா பகுதிகளில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது அதிர்ச்சி அளிக்கிறது. காவிரி டெல்டா பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மத்திய அரசு இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். விளைநிலங்களில் வைரமே கிடைத்தாலும் தங்களுக்கு தேவையில்லை என்றும், இது தங்களது தொழில் அல்ல வாழ்க்கை முறை என காவிரி டெல்டா பகுதி மக்கள் தெரிவித்து வரும் நிலையில், மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்த முனைப்பு காட்டக்கூடாது. டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி எடுக்கும் இந்த திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்.
தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் எந்த திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்க கூடாது. அ.தி.மு.க. விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு வரை ஓ.பன்னீர்செல்வம் விட மாட்டார். ஒருவேளை நீதிமன்ற தீர்ப்பில் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக இரட்டை இலையும், அ.தி.மு.க.வும் வந்தால் அது அ.தி.மு.க.வை அழிவு பாதைக்கு கொண்டு செல்லும். ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி கையில் சிக்கிய அ.தி.மு.க. அழிவு பாதையை நோக்கி செல்கிறது. அ.தி.மு.க. தொண்டர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டால் தான் தி.மு.க.வை வீழ்த்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.