< Back
மாநில செய்திகள்
மத்திய அரசு கூடுதலாக அரவை கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய நடவடிக்கை
விருதுநகர்
மாநில செய்திகள்

மத்திய அரசு கூடுதலாக அரவை கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய நடவடிக்கை

தினத்தந்தி
|
15 March 2023 7:37 PM GMT

தமிழகத்தில் மத்திய அரசு கூடுதலாக அரவை கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்னை விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.


தமிழகத்தில் மத்திய அரசு கூடுதலாக அரவை கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்னை விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

கொள்முதல்

இதுபற்றி தென்னை சாகுபடி விவசாயிகள் கூறியதாவது:-

மத்திய அரசு அரவை கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய ஆதார வழியாக டன் ரூ. 10,860 என நிர்ணயம் செய்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு அரசு 40,060 டன் அரவை கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்துள்ளது. ஆனால் தனியார் நிறுவனங்கள் இதைவிட 10 மடங்கு அதிகமாக தென்னை விவசாயிகளிடமிருந்து அரவை கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்து உள்ளன. இதனால் தென்னை விவசாயிகளுக்கு அரசு நிர்ணயித்த விலை கிடைக்க வாய்ப்பில்லை. இந்தநிலையில் மத்திய அரசு நடப்பு ஆண்டில் கேரள மாநிலத்தில் 50 ஆயிரம் டன் அரவை கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊக்கத்தொகை

ஆனால் கடந்த ஆண்டு இதே அளவு கொள்முதல் செய்ய மத்திய அரசு முடிவு செய்த நிலையில் அங்கு 580 டன் அரவை கொப்பரை தேங்காய் தான் மத்திய அரசால் கொள்முதல் செய்ய முடிந்துள்ளது. தமிழக அரசின் விவசாயத்துறை கேரள மாநிலத்தில் 40 ஆயிரம் டன் அரவை கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ததாக அங்குள்ள விவசாயிகளும், வியாபாரிகளும் தெரிவிக்கின்றனர்.

எனவே மத்திய அரசு தமிழக அரசு மூலமாக தமிழகத்திலும் 50 ஆயிரம் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தமிழக அரசும் நெல் கொள்முதலுக்கு ஊக்கத்தொகை வழங்குவது போல, அரவை தேங்காய் கொள்முதலுக்கும் ஊக்கத்தொகை வழங்க வேண்டியது அவசியமாகும்.

பொது வினியோக கடைகள்

தமிழக அரசு நேரடியாக கொள்முதல் செய்து எண்ணெய் உற்பத்தி செய்து பொது வினியோக கடைகள் மற்றும் மாணவர் விடுதிகள் போன்றவற்றிற்கும் வினியோகம் செய்ய வேண்டும்.

அதன் மூலம் தென்னை விவசாயிகள் பயனடைய வாய்ப்பு ஏற்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்