"எய்ம்ஸ் விவகாரத்தில் மத்திய பாஜக அரசு ஒருதலைபட்சமாக செயல்படுகிறது" - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
|பிரதமரின் பெயரில் உள்ள திட்டங்களில் மாநில அரசு நிதியின் பங்களிப்பே அதிகம் உள்ளது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
மதுரை,
மதுரையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எய்ம்ஸ் விவகாரத்தில் மத்திய பாஜக அரசு ஒருதலைபட்சமாக செயல்படுகிறது. ஒன்றாக அறிவித்த 2 எய்ம்ஸ் மருத்துவமனைகளில் ஒன்றை திறந்து வைத்துள்ளனர். மதுரையில் சுவர் கூட கட்டவில்லை.
பிரதமரின் பெயரில் உள்ள திட்டங்களில் மாநில அரசு நிதியின் பங்களிப்பே அதிகம் உள்ளது. ஆரம்பத்தில் 75 சதவீதம் பங்குடன் தொடங்கப்படும் மத்திய அரசின் பல திட்டங்களுக்கு படிப்படியாக நிதி குறைக்கப்படுகிறது. மாநில அரசு 80 சதவீதம் நிதி வழங்கும் போது திட்டத்தின் பெயர் மட்டும் பிரதான் மந்திரி என்று உள்ளது.
திமுகவில் நான் அடிமட்ட தொண்டன் மட்டுமே. அரசாங்கம் சார்பாக நிதியமைச்சர் என்ற முறையில் பல இடங்களில் கருத்துகளை கூறினேன். கட்சி கருத்தை மூத்த நிர்வாகிகள் கூறுவார்கள்.
குதிரைப்பந்தயம், ஆன்லைன் விளையாட்டுகள் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவதற்காக அறிக்கை தயாராகாததால் ஜி.எஸ்.டி. கூட்டத்தை நடத்த முடியவில்லை. ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தை விரைவாக நடத்த மத்திய நிதி மந்திரிக்கு கோரிக்கை விடுத்து உள்ளேன். என கூறினார்.