புதுக்கோட்டை
மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்தது
|புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் மேற்கூரை சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்ததில் தாய், மகன் படுகாயமடைந்தனர்.
சிமெண்டு பூச்சுகள் விழுந்தது
புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் பஸ் நிலைய கட்டிடம் சேதமடைந்த நிலையில் ஆங்காங்கே காணப்படுகிறது. இதில் மேற்கூரை சிமெண்டு பூச்சுகள் அவ்வப்போது பெயர்ந்து விழுவது வழக்கம்.
இதனால் பழமையான இந்த பஸ் நிலைய கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் காரைக்குடி பஸ் நிறுத்த பகுதியில் மேற்கூரையில் கான்கிரீட் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து சிறிது விழுந்தது.
தாய்-மகன் படுகாயம்
இதில் அந்த இடத்தில் நின்று கொண்டிருந்த தஞ்சாவூர் மாவட்டம் செருவாவிடுதி பகுதியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது தாயார் வெள்ளையம்மாள் ஆகியோர் மீது விழுந்ததில் படுகாயமடைந்தனர். அவர்கள் 2 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெயர்ந்து விழுந்த சிமெண்டு பூச்சுகள் ஊழியர்கள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டன. மேற்கூரை பெயர்ந்து விழுந்த பகுதியை நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 2 பேரையும் பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.