< Back
மாநில செய்திகள்
விழுப்புரத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு
மாநில செய்திகள்

விழுப்புரத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு

தினத்தந்தி
|
3 May 2024 3:48 PM IST

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.

விழுப்புரம்,

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 19-ந்தேதி நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்ததும் சீல் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூம் என்று அழைக்கப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த அறைக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சமீபத்தில் நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் சிசிடிவி கேமராக்கள் இயங்கவில்லை என புகார் எழுந்தது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த பிரச்சனை ஏற்பட்டதாகவும் சிறிது நிமிடங்களில் அது சரிசெய்யப்பட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

இந்த நிலையில், இதன் தொடர்ச்சியாக தற்போது விழுப்புரத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி கேமராக்கள் 30 நிமிடங்கள் செயலிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.

இன்று காலை 9.28 மணியளவில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமுக்கான சி.சி.டி.வி. கேமராக்கள் திடீரென நின்றன. வேட்பாளர்களின் முகவர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த நிலையில் மீண்டும் 9.56 மணிக்கு சிசிடிவி கேமராக்கள் செயல்பட தொடங்கின. யு.பி.எஸ்-ல் மின்தடை ஏற்பட்டு, பின் அது சரி செய்யப்பட்டதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான பழனி விளக்கமளித்தார்.

மேலும் செய்திகள்