< Back
மாநில செய்திகள்
காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளை இயக்கும் அதிகாரத்தை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு வழங்க வேண்டும் - ராமதாஸ்
மாநில செய்திகள்

காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளை இயக்கும் அதிகாரத்தை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு வழங்க வேண்டும் - ராமதாஸ்

தினத்தந்தி
|
23 Aug 2023 1:03 PM IST

காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளை இயக்கும் அதிகாரத்தை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு வழங்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவதது,

தமிழ்நாட்டின் காவிரி பாசன மாவட்டங்களில் கருகும் நிலையில் உள்ள குறுவை பயிர்களைக் காக்க காவிரியில் வினாடிக்கு 24,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடும்படி தமிழகம் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், அறமும், மனசாட்சியும் இல்லாத கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அணைகளில் தேவைக்கும் அதிகமாகவே தண்ணீர் வைத்துள்ள கர்நாடகம், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வழங்க மறுப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. காவிரி மேலாண்மை வாரியத்துக்கு மாற்றமாக நடுவர் மன்றத்தால் கூறப்பட்டுள்ள பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியம் அனைத்து அதிகாரங்களையும் கொண்டதாக உள்ளது.

இந்த வாரியம் தான் பக்ரா, நங்கல், பியாஸ் திட்டங்களின் அணைகளை இயக்கி பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், இமாச்சலபிரதேசம், சண்டிகர், டெல்லி ஆகிய 7 மாநிலங்களுக்கு நீரையும், மின்சாரத்தையும் வழங்கி வருகிறது. 55 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் இந்த அமைப்பு எந்த சிக்கலும் இல்லாமல் நீரையும், மின்சாரத்தையும் பகிர்ந்தளித்து வருகிறது.

காவிரி நடுவர் மன்றம் 1991-ம் ஆண்டில் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பும், 2005-ம் ஆண்டில் வழங்கிய இறுதித் தீர்ப்பும் கர்நாடக அரசால் ஓர் ஆண்டு கூட சரியாக செயல்படுத்தப்படவில்லை. அதனால் இப்போதைய அமைப்பு மாற்றப்பட வேண்டும்.

பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியத்திற்கு வழங்கப்பட்டிருப்பது போன்று, காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அனைத்து அணைகளையும் இயக்கும் அதிகாரத்தை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டும். இதுகுறித்து மத்திய அரசுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்து வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்