< Back
மாநில செய்திகள்
பெண் பேராசிரியரை ஏமாற்றி விட்டு 2-வது திருமணம் செய்ய முயற்சி சிறை காவலர் உள்பட 3 பேர் மீது வழக்கு
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

பெண் பேராசிரியரை ஏமாற்றி விட்டு 2-வது திருமணம் செய்ய முயற்சி சிறை காவலர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தினத்தந்தி
|
30 May 2022 1:42 AM GMT

பெண் பேராசிரியரை ஏமாற்றி விட்டு 2-வது திருமணம் செய்ய முயன்ற சிறை காவலர் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.


கோவையை அடுத்த சூலூரை சேர்ந்த 29 வயதான கல்லூரி பேராசிரியை ஒருவர் ரேஸ்கோர்ஸ் போலீசில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:-

நான் கோவையில் உள்ள ஒரு பார்மசி கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வருகிறேன். எனது தந்தை கோவை மத்திய சிறையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அதே சிறையில் காவலராக பணியாற்றிய ரவிக்குமார் (வயது 31) என்பவர் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவார்.

நாங்கள் கோவையில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்த போது, ரவிக்குமாரும் அதே பகுதியில் குடியிருந்தார். இதனால் எனக்கும், அவருக்கும் நட்பு ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. இதனால் நாங்கள் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனிலும் பேசிக்கொண்டோம்.

கோவிலில் வைத்து திருமணம்

மேலும் பொள்ளாச்சி, ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களுக்கு என்னை அவர் அழைத்துச் சென்றார். அப்போது நாங்கள் அங்கு அறை எடுத்து ஒன்றாக தங்கி இருந்தோம். அவர், என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்தார்.

இந்த நிலையில் அவர் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் திருப்பூருக்கு பணி மாறுதலாகி சென்றார். அதன்பிறகும் என்னி டம் தொடர்ந்து பேசி வந்தார். இதையடுத்து நான் அவரிடம் என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினேன். அதை ஏற்று கடந்த மார்ச் மாதம் 28-ந் தேதி என்னை பொள் ளாச்சியில் உள்ள ஒரு கோவிலில் வைத்து எனக்கு தாலி கட்டி திருமணம் செய்தார்.

அலைபாயுதே படபாணி

அதன் பிறகு நாங்கள் அலைபாயுதே சினிமா பட பாணியில் அவரவர் வீடுகளில் வசித்து வந்தோம். நான் அவரிடம் உங்கள் வீட்டுக்கு என்னை அழைத்து செல்லுங்கள் என்று பலமுறை கூறினேன். ஆனால் அவர் காலம் கடத்தி வந்தார். பின்னர் நான் வற்புறுத்தியும் என்னை அழைத்துச்செல்ல மறுத்துவிட்டார்.

இதையடுத்து நான் அவருடைய செல்போனுக்கு தொடர்பு கொண்டால் எடுத்து பேசுவது இல்லை. எனது செல்போன் எண் ணை பிளாக் செய்துவிட்டார். தற்போது அவருக்கும், அவருடைய உறவுக்கார இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

2-வது திருமணம் செய்ய முயற்சி

இது குறித்து நான் அவரிடம் நேரில் சென்று கேட்டபோது நான் உன்னை திருமணம் செய்ய வில்லை. இனிமேல் இங்கு வந்து ஏதாவது கேட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்தார். அதற்கு அவருடைய பெற்றோரும் உடந்தையாக இருந்தனர். என்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டு வேறு ஒரு பெண்ணை 2-வதாக திருமணம் செய்ய முயற்சி செய்யும் எனது கணவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

3 பேர் மீது வழக்கு

அந்த புகாரின் பேரில் சிறை காவலர் ரவிக்குமார், அவருடைய தந்தை வெங்கடேஷ், தாயார் பரிமளா ஆகிய 3 பேர் மீது பொய் வாக்குறுதிகளை கூறி திருமணம் செய்தல், கொலை மிரட்டல் விடுத்தல், பெண் வன்கொடுமை தடுப்புசட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்