நீலகிரி
200 அடி தூரத்துக்கு பள்ளத்தில் இறங்கிய கார்
|ஊட்டி-தொட்டபெட்டா சாலையோரத்தில் நிறுத்தியபோது 200 அடி தூரத்துக்கு பள்ளத்தில் கார் இறங்கியது. மரக்கிளையில் மோதி நின்றதால் 4 பேர் உயிர் தப்பினர்.
ஊட்டி
ஊட்டி-தொட்டபெட்டா சாலையோரத்தில் நிறுத்தியபோது 200 அடி தூரத்துக்கு பள்ளத்தில் கார் இறங்கியது. மரக்கிளையில் மோதி நின்றதால் 4 பேர் உயிர் தப்பினர்.
ஆடிட்டர் குடும்பம்
நீலகிரி மாவட்டத்தில் 2-வது சீசன் தொடங்கியுள்ளது. மேலும் பள்ளிகளில் காலாண்டு தேர்வு விடுமுறை, மிலாது நபி விடுமுறை என தொடர் விடுமுறை வந்து உள்ளது. இதையொட்டி நீலகிரிக்கு குடும்பத்துடன் வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அன்பு நகரை சேர்ந்த ஆடிட்டரான முத்துக்குமார் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் நேற்று முன்தினம் ஊட்டிக்கு காரில் வந்தார். ஊட்டியில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்துவிட்டு நேற்று காலை தொட்டபெட்டா மலைச்சிகரத்திற்கு சென்றனர்.
பள்ளத்தில் இறங்கியது
தொட்டபெட்டா அருகே சென்றபோது காரை சாலையோரம் நிறுத்திவிட்டு கீழே இறங்கிய முத்துக்குமார், கண்ணாடியை சரி செய்துவிட்டு மீண்டும் காரில் ஏறி இயக்க முயன்றார்.
அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் பின்னோக்கி நகர்ந்து சாலையோர பள்ளத்தில் இறங்கியது. அவர் எவ்வளவோ முயற்சி செய்தும் கார் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. தொடர்ந்து பின்னோக்கி சென்ற கார், சுமார் 200 அடி தூர பள்ளத்தில் இறங்கி மரக்கிளையில் மோதி நின்றது. இதனால் அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இதுகுறித்து தேனாடுகம்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.