< Back
மாநில செய்திகள்
கட்சி அலுவலகத்தில் மீளாத் துயில் கொண்ட கேப்டன்.. முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
மாநில செய்திகள்

கட்சி அலுவலகத்தில் மீளாத் துயில் கொண்ட கேப்டன்.. முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

தினத்தந்தி
|
29 Dec 2023 7:11 PM IST

விஜயகாந்த் உடலை பார்த்து கதறி அழுத பிரேமலதா இறுதியாக கனத்த இதயத்துடன் கைகளை பிடித்தப்படி பிரியாவிடை அளித்தார்.

சென்னை:

தே.மு.தி.க. தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் சென்னையில் நேற்று காலமானார். அவரது உடல் மருத்துவமனையில் இருந்து சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு விஜயகாந்தின் உடலுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

நேரம் செல்லச் செல்ல விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்த வருவோரின் எண்ணிக்கை அதிகமானதால் கோயம்பேட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கட்சி அலுவலக வளாகத்திலும் நெரிசல் அதிகமானது. எனவே, விஜயகாந்தின் உடல் இன்று காலை தீவுத்திடலுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

தீவுத்திடலில் விஜயகாந்த் உடலுக்கு பல்வேறு தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி நிகழ்ச்சிக்கு பிறகு பிற்பகல் விஜயகாந்த் உடல், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் கோயம்பேட்டுக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.

அப்போது வழிநெடுக தேமுதிக தொண்டர்களும் பொதுமக்களும் விஜயகாந்துக்கு கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தி பிரியாவிடை கொடுத்தனர். ஊர்வலத்தில் அணிவகுத்து வந்த தொண்டர்கள், 'வீர வணக்கம், வீரவணக்கம்.. கேப்டனுக்கு வீர வணக்கம்' என முழக்கமிட்டபடி வந்தனர்.

சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இறுதி ஊர்வலம் மாலை 6 மணி மணியளவில் கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தை அடைந்தது. மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த விஜயகாந்த் உடல் வைக்கப்பட்ட பேழை, கீழே இறக்கப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெறும் இடத்திற்கு கொண்டு வரப்பட்டு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதன்பின்னர் 72 குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதை வழங்கப்பட்டது. 24 போலீசார் 3 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மரியாதை செலுத்தினர்.

பின்னர் சந்தன பெட்டியில் வைக்கப்பட்ட விஜயகாந்த் உடலுக்கு, அவரது மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோர் இறுதிச்சடங்குகளை செய்தனர். தேவாரம், திருவாசகம், பாடப்பட்டு இறுதிச்சடங்கு நடந்தது. விஜயகாந்திற்கு அவரது மகன்கள் கண்ணிர்மல்க தந்தைக்கு இறுதிச்சடங்குகளை செய்தனர்.

சந்தன பேழையில், புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த் என பொறிக்கப்பட்டுள்ளது. விஜயராஜாவாக பிறந்து விஜயகாந்தாக மாறி கேப்டனாக உயர்ந்துள்ளார். கோயம்பேடு மேம்பாலத்தில் திரண்டுள்ள மக்கள் கூட்டம் செல்போன்களில் டார்ச்சை ஒளிரவிட்டபடி கேப்டன் விஜயகாந்துக்கு பிரியாவிடை அளித்தனர்.

நல்லடக்கம் செய்யும் நிகழ்வில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. கூட்ட நெரிசலை குறைப்பதற்காக, குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், முக்கிய தலைவர்கள் உட்பட 200 பேருக்கு மட்டுமே நேரில் காண அனுமதி வழங்கப்பட்டிருந்தது. வெளியில் திரண்டிருந்தவர்கள் இறுதிச் சடங்கை காண எல்.இ.டி. திரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இறுதி சடங்கில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்,அமைச்சர்கள்,உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன், தங்கம் தென்னரசு, தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்,ஓபிஎஸ், ஜெயக்குமார், ஜி.கே.வாசன்,முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் இறுதி சடங்கில் பங்கேற்றனர்.

மக்களின் அளவு கடந்த அன்பை சுமந்து கொண்டு பூமியில் விதைக்கப்பட்டுள்ளார் விஜயகாந்த்.

மேலும் செய்திகள்