< Back
மாநில செய்திகள்
நீட் தேர்வு ரத்தாகும் வரை தொடர் போராட்டம் நடத்தப்படும்; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
பெரம்பலூர்
மாநில செய்திகள்

நீட் தேர்வு ரத்தாகும் வரை தொடர் போராட்டம் நடத்தப்படும்; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

தினத்தந்தி
|
29 Aug 2023 12:45 AM IST

நீட் தேர்வு ரத்தாகும் வரை தொடர் போரட்டம் நடத்தப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டம், பெரம்பலூர் பாலக்கரையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் நேற்று இரவு நடந்தது. கூட்டத்திற்கு தி.மு.க. துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி. தலைமை தாங்கினார். அரியலூர் மாட்ட தி.மு.க. செயலாளரும், போக்குவரத்துத்துறை அமைச்சருமான எஸ்.எஸ்.சிவசங்கர், பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. செயலாளரும், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவருமான குன்னம் சி.ராஜேந்திரன், பெரம்பலூர் நகர தி.மு.க. செயலாளர் பிரபாகரன் எம்.எல்.ஏ., தா.பழூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் க.சொ.க.கண்ணன் எம்.எல்.ஏ., தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளரும், இளைஞரணி மண்டல செயலாளருமான ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.

ஒரு செங்கலை வைத்து...

கூட்டத்தில் ஆ.ராசா எம்.பி. பேசுகையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை மக்களுடைய தலைவராக ஏற்றுக்கொண்டனர். அகில இந்திய அளவில் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மத்திய அரசின் 15 சதவீத இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி பெற்றுத்தந்தவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெரிய போராட்டமின்றி ஒரே செங்கலை தூக்கி புரட்சி செய்து மதுரையில் கட்டப்படவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கூடுதல் சீட்டுகளை பெற்றுத்தந்தார். பா.ஜ.க. தமிழ்நாட்டில் வாலாட்ட முடியாது, என்றார்.

அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், தமிழகத்தில் நம்பர் ஒன் அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். சமூக நீதி, ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீட்டிற்கு அனுப்ப முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆணைப்படி இந்த கூட்டத்தில் சூளுரை ஏற்று செயல்படுவோம், என்றார்.

தொடர் போராட்டம்

கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

தமிழகத்தில் 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் ஏழை, எளிய மக்கள் டாக்டராக வேண்டும் என்று நுழைவு தேர்வினை ரத்து செய்தது தி.மு.க. அரசுதான். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இருந்த வரை தமிழகத்தில் நீட் தேர்வு கொண்டு வரப்படவில்லை, அதன் பின்னர் அ.தி.மு.க. ஆட்சியில் தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. இந்த நீட் தேர்வால் இதுவரை 21 பேர் தற்கொலை செய்துள்ளனர்.

இதற்கு காரணம் மத்திய பா.ஜ.க. அரசும், அ.தி.மு.க. அரசும்தான். தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று சட்டசபையில் 2 முறை தீர்மானம் நிறைவேற்றி கவர்னர், ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நீட் தேர்வு ரத்தாகும் வரை தொடர் போராட்டம் நடத்தப்படும். நாட்டிலேயே முதன் முதலாக தமிழகத்தில் கொண்டு வரப்பட்ட முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

பயப்பட மாட்டோம்

பிரதமர் நரேந்திர மோடி அவரது நெருங்கிய நண்பர் அதானி இல்லாமல் எங்கும் செல்ல மாட்டார். இந்தியாவில் உள்ள அனைத்து பொதுத்துறையும் அதானியிடம் கொடுக்கப்பட்டுள்ளது. சி.ஏ.ஐ. அமைப்பு தணிக்கை செய்து வெளியிட்ட அறிக்கையில், துவராக விரைவு சாலை திட்டத்தில் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை சாலை அமைக்க ரூ.18 கோடி செலவு செய்ய அனுமதி உள்ளது. ஆனால் இதில் ஒரு கிலோ மீட்டர் தூரத்தை 6 வழிச்சாலை என கணக்கு காண்பித்து, ரூ.250 கோடி செலவு செய்துள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இறந்து போன 88 ஆயிரம் பேருக்கு மருத்துவ காப்பீடு தொகை கொடுத்துள்ளனர். 6 சுங்கச்சாடியில் ரூ.120 கோடி முறைகேடாக மக்களிடம் இருந்து கொள்ளையடித்துள்ளதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளது.

நாங்கள் மோடிக்கும் பயப்படமாட்டோம். உங்களது இ.டி., சி.பி.ஐ., ஐ.டி. போன்றவற்றிற்கும் பயப்படமாட்டோம். பா.ஜ.க. அரசு ஆளும் கட்சியாக உள்ள மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 5 மாதங்களாக நடந்து வரும் கலவரத்தில் 250-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். மணிப்பூரை சேர்ந்த 18 விளையாட்டு வீரர்கள் தமிழகத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வையும், அ.தி.மு.க.வையும் ஒழித்ததாக வேண்டும். இந்த தேர்தலில் 40 தொகுதியிலும் வெற்றி பெற இளைஞரணியினர் பாடுபட வேண்டும். சேலத்தில் வருகிற டிசம்பர் 17-ந்தேதி நடைபெறும் தி.மு.க. இளைஞரணி மாநாட்டில் இளைஞரணியினர் அனைவரும் குடும்பத்தோடு வந்து கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

வீர வாள்

கூட்டத்தில் பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட இளைஞரணி சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அதில் முதற்கட்டமாக ரூ.25 லட்சத்திற்கான காசோலை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது. மேலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, வீர வாள் வழங்கப்பட்டு, ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டது.

விளம்பர பதாகைகள் அகற்றம்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்று பெரம்பலூர்-அரியலூரில் கட்சியினர் சார்பில் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. என்னை வரவேற்று விளம்பர பதாகை வைக்கக்கூடாது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் இருந்து உத்தரவு வந்ததை தொடர்ந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகளை உடனடியாக கட்சியினர் அகற்றினர்.

மேலும் செய்திகள்