< Back
மாநில செய்திகள்
ஓடும் பஸ்ஸில் டிரைவருக்கு தலை சுற்றல்..! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்..!
மாநில செய்திகள்

ஓடும் பஸ்ஸில் டிரைவருக்கு தலை சுற்றல்..! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்..!

தினத்தந்தி
|
25 July 2022 4:19 PM IST

குன்னூர் அருகே அரசு பஸ்சில் டிரைவருக்கு தலை சுற்றல் ஏற்பட்ட நிலையில் சாமர்த்தியமாக செயல்பட்டு பஸ்சை நிறுத்தியதால் பயணிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

குன்னூர்:

குன்னூரிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் பால்மராலீஸ் பகுதி உள்ளது. இங்கிருந்து குன்னூருக்கு தினசரி அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இன்று காலை வழக்கம் போல பால்மராலீஸ் பகுதியிலிருந்து அரசு பஸ் புறப்பட்டது.

பஸ்ஸை குன்னூர் அருகேயுள்ள சேலாஸை சேர்ந்த இளங்கா (54) என்பவர் ஓட்டி வந்தார். பஸ்ஸில் சுமார் 60 க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பஸ் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள காட்டேரி அருகே வந்த போது டிரைவர் இளங்கோவிற்கு திடீரென்று தலைசுற்றல் ஏற்பட்டது. டிரைவர் சாமர்த்தியமாக இடது புறம் உள்ள சுற்றில் இடித்து பஸ்ஸை நிறுத்தினார். இதில் பஸ்சில் இருந்த பயணிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

உடனடியாக அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள் இணைந்து, டிரைவர் இளங்கோவையும் காயமடைந்தவர்களையும் குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இரண்டு பேர் மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

சம்பவம் அறிந்து குன்னூர் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் உள்ளிட்டோர் குன்னூர் ஆஸ்பத்திரிக்கு சென்று காயமடைந்தவர்களை பார்வையிட்டு விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் செய்திகள்