திருவாரூர்
குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்
|மேலநம்மங்குறிச்சி கிராமத்தில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தில்லைவிளாகம்:
மேலநம்மங்குறிச்சி கிராமத்தில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாணவர்கள் சென்று வருகின்றனர்
முத்துப்பேட்டையை அடுத்த மேலநம்மங்குறிச்சி கிராமம் உள்ளது. முத்துப்பேட்டையில் இருந்து கீழநம்மங்குறிச்சி, பெத்தவேளாண் கோட்டகம் வழியாக மேலநம்மங்குறிச்சிக்கு செல்லும் சாலை உள்ளது.
மேலநம்மங்குறிச்சியில் தொடக்கப்பள்ளி மட்டுமே உள்ளதால் மேற்படிப்பிற்காக மாணவர்கள் முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, மதுக்கூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. மேலநம்மங்குறிச்சி சாலை வழியாக பள்ளி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் தினமும் வாகனங்களில் சென்று வருகின்றனர்.
குண்டும், குழியுமான சாலை
இந்த சாலை சேதமடைந்து காணப்படுகிறது. சாலையில் உள்ள ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கி கொள்கின்றனர்.
மேலும் இந்த சேதமடைந்த சாலையில் செல்லும் வாகனங்கள் அவ்வப்போது பழுதடைந்து வருகிறது. சேதமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சீரமைக்க வேண்டும்
சேதமடைந்த சாலையால் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாணவ-மாணவிகளின் நலன் கருதி சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.