< Back
மாநில செய்திகள்
குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்
திருவாரூர்
மாநில செய்திகள்

குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்

தினத்தந்தி
|
4 July 2023 12:15 AM IST

முத்துப்பேட்டை அருகே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருத்துறைப்பூண்டி:

1 கிலோ மீட்டர் சாலை

முத்துப்பேட்டையை அடுத்த கற்பகநாதர்குளம் ஊராட்சி காடுவெட்டி கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பகுதியில் செல்லும் சாலை சுமார் 1 கிலோமீட்டர் தூரம் கொண்டது. இந்த சாலையை இப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் இந்த கிராம மக்கள் இன்றி பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள், இந்த சாலை வழியாக சென்று வருகின்றனர். இடும்பாவனம் மற்றும் கரையங்காடு கடைதெருவுக்கும், அதேபோன்று மெயின் ரோடு வந்து முத்துப்பேட்டை, வேதாரண்யம் ஆகிய பகுதிகளுக்கும் பொதுமக்கள் சென்று வருகின்றனர்.

குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது

குறிப்பாக இந்த பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் வந்து செல்கின்றனர். அதேபோல் கிராம மக்கள் கடைதெருவுக்கு இந்த வழியாக சென்று வருகின்றனர். விவசாயிகளின் வயலுக்கு வேளாண் இடுபொருட்களை வாகனங்களுக்கு கொண்டு செல்கின்றனர்.

அதேபோல் விவசாயிகள் விளைவிக்கப்படும் விளைபொருட்களை விற்பனை செய்ய இந்த வழியாக வாகனங்களில் கொண்டு சென்று வந்தனர்.15 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்த சாலை தற்போது சேதமடைந்து காணப்படுகிறது. சாலையில் ஜல்லிகற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது.

சீரமைக்க வேண்டும்

இந்த வழியாக இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் தடுமாறி கிழே விழுந்து காயம் அடைகின்றனர். இரவில் மேட்டார் சைக்கிளில் வருபவர்கள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் கீழே விழுகின்றனர். இதுபோன்று சிறிய விபத்துகள் அடிக்கடி நடந்து வருகின்றன.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்