புதுக்கோட்டை
கட்டப்பட்ட குளியல் தொட்டி சுவர் இடிந்து விழுந்தது
|கட்டப்பட்ட குளியல் தொட்டி சுவர் இடிந்து விழுந்தது.
புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வாகவாசல் ஊராட்சியில் 14-வது நிதிக்குழு மாநிலத்தின் கீழ் ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக ராசாபட்டி கிராமத்தில் குளத்து கரையில் கட்டப்பட்ட குளியல் தொட்டி பக்கச்சுவர் இடிந்து விழுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் கட்டி முடிக்கப்பட்டு 2 மாதங்களே ஆன நிலையில் சுவர் இடிந்து விழுந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் குளத்து கரையில் கட்டப்படும் குளியல் தொட்டி சரியான முறையில் அஸ்திவாரம் தோண்டப்படாமல் மேல் தரையிலேயே சரியான கட்டுமான பொருட்களை பயன்படுத்தாமல் கட்டி முடிக்கப்பட்டது. இந்தநிலையில் கடந்த ஒரு மாதமாக தண்ணீர் நிரப்பி பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்ட நிலையில் பக்கவாட்டு தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது. பொதுமக்கள் யாரும் குளியல் தொட்டியை பயன்படுத்தாத நேரத்தில் தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக விபத்துக்கள் தவிர்க்கப்பட்டது. இதையடுத்து வாகவாசல் ஊராட்சி ராசாபட்டியில் இடிந்து விழுந்த குளியல் தொட்டியை முற்றிலும் அப்புறப்படுத்தி அஸ்திவாரம் வைத்து புதிய குளியல் தொட்டி கட்டி தருமாறு அப்பகுதி மக்கள் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தரமற்ற முறையில் குளியல் தொட்டி கட்டி கொடுத்த ஒப்பந்ததாரர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.