< Back
மாநில செய்திகள்
வீடுபுகுந்து மாமியாரை கொன்ற கொடூரம்;மனைவி, கொழுந்தியாளுக்கும் கத்திக்குத்து
சிவகங்கை
மாநில செய்திகள்

வீடுபுகுந்து மாமியாரை கொன்ற கொடூரம்;மனைவி, கொழுந்தியாளுக்கும் கத்திக்குத்து

தினத்தந்தி
|
27 Aug 2023 12:15 AM IST

கத்தியால் குத்தி மாமியார் கொலை செய்யப்பட்டார். காயம் அடைந்த மனைவி, கொழுந்தியாளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் சென்னை வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருப்புவனம்

கத்தியால் குத்தி மாமியார் கொலை செய்யப்பட்டார். காயம் அடைந்த மனைவி, கொழுந்தியாளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் சென்னை வாலிபர் கைது செய்யப்பட்டார்.

காதல் திருமணம்

விருதுநகர் மாவட்டம் மறையூர் கிராமத்தை சேர்ந்தவர் மாயாண்டி. இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி(வயது 38). இவர்களுடைய மகள்கள் மகாலட்சுமி (20), உஷாராணி (18).

அதில் மூத்த மகள் மகாலட்சுமி சென்னை பகுதியை சேர்ந்த அருண்(24) என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. உஷாராணி திருப்புவனம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில் மகாலட்சுமிக்கும், அருணுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அவரை பிரிந்து தாய் வீட்டில் வாழ்ந்து வந்தார். தற்போது மகாலட்சுமி மதுரையில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார்.

அப்போது மதுரை மாவட்டம் புளியங்குளத்தை சேர்ந்த சுதர்சன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவரை காதலித்து 2-வதாக திருமணம் செய்து கொண்டார். அவர் சுதர்சனுடன் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ெரயில்வே பீடர் ரோடு பகுதியில் வசித்து வந்தார். மேலும் இவர்களுடன் தமிழ்ச்செல்வியும், உஷாராணியும் வசித்து வந்தனர்.

குத்திக்கொலை

இந்த நிலையில் முதல் கணவரான அருண் நேற்று திருப்புவனம் வந்து மகாலட்சுமியிடம் தகராறு செய்தார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியது. ஆத்திரம் அடைந்த அருண் கத்தியால் மகாலட்சுமியை சரமாரியாக குத்தினார். இதை தடுக்க வந்த தமிழ்ச்செல்வி, உஷாராணி ஆகியோரையும் அவர் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்புவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதல் உதவி அளிக்கப்பட்டு பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே தமிழ்ச்செல்வி பரிதாபமாக இறந்தார்.

மகாலட்சுமி, உஷாராணி ஆகியோர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற இடத்தை மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு(பொறுப்பு) பிரகாஷ் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

வாலிபர் கைது

இந்த சம்பவம் குறித்து திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய அருணை தேடி வந்தனர். இதற்கிடையே அருண், மதுரை நோக்கி பஸ்சில் செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று சிலைமான் அருகே பஸ்சை வழிமறித்தனர்.

போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்ற அருணை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்