2-வது திருமணத்துக்கு இடையூறாக இருந்ததாக 3 வயது குழந்தையை தரையில் தூக்கி வீசி தாக்கிய கொடூர தந்தை
|தகாத உறவு குறித்து கண்டித்ததால் சக்திவேலை அவரது மனைவி பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது.
கிருஷ்ணகிரி,
இரண்டாவது திருமணத்துக்கு இடையூறாக இருந்ததாக கூறி 3 வயது குழந்தையை தந்தை, தரையில் தூக்கி வீசி தாக்கிய கொடூரம் அரங்கேறியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சிப்காட் பகுதியைச் சேர்ந்த தம்பதி சக்திவேல்-சுதா. இவர்கள் இருவரும் செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த நிலையில், செங்கல் சூளை நடத்தி வந்த பூவரசனுடன் சுதாவுக்கு தகாத உறவு இருந்து வந்துள்ளது. இது குறித்து கண்டித்ததால் சக்திவேலை அவரது மனைவி சுதா பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இரண்டாவது திருமணம் செய்ய இருந்த சக்திவேலுக்கு, அவரது குழந்தையை காரணம் காட்டி, பெண் தர மறுத்துள்ளனர். இதனால் விரக்தியில் இருந்த அவர், தனது 3 வயது குழந்தையை தரையில் வீசி கொடூரமாக தாக்கியுள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படுகாயமடைந்த குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், சக்திவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.