< Back
மாநில செய்திகள்
தூக்கில் பிணமாக தொங்கிய புதுமாப்பிள்ளை
திருவாரூர்
மாநில செய்திகள்

தூக்கில் பிணமாக தொங்கிய புதுமாப்பிள்ளை

தினத்தந்தி
|
15 Aug 2023 12:15 AM IST

முத்துப்பேட்டை அருகே புதுமாப்பிள்ளை தூக்கில் பிணமாக தொங்கினார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தாயார் புகார் கொடுத்துள்ளார்

முத்துப்பேட்டை:

முத்துப்பேட்டை அருகே புதுமாப்பிள்ளை தூக்கில் பிணமாக தொங்கினார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தாயார் புகார் கொடுத்துள்ளார்.

தூக்கில் பிணம்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த கோவிலூர் சுடுகாடு அருகே நேற்று வாலிபர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். அப்போது இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் போலீசார் சென்று வாலிபரின் உடலை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

காதல்

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் தூக்கில் பிணமாக தொங்கியவர் முத்துப்பேட்டையை அடுத்த கோவிலூர் வடக்காடு கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் மகன் சந்தோஷ் (வயது20) என்பது தெரிய வந்தது.

மேலும் சந்தோஷ் மங்கலூர் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்துள்ளார். காதலர்கள் தனிமையில் இருந்ததால் அந்த பெண் கர்ப்பம் அடைந்துள்ளார். அந்த பெண்ணை சந்தோஷ் திருமணம் செய்ய மறுத்துள்ளார்.

திருமணம்

இதனால் அந்த பெண், இதுகுறித்து முத்துப்பேட்டை மகளிர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதை தொடர்ந்து இருவரின் குடும்பத்தினரையும் போலீசார் அழைத்து ேபச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர்.

பின்னர் கடந்த மாதம் அந்த பகுதியில் உள்ள ஒரு கோவிலில் சந்தோசுக்கும், அந்த பெண்ணுக்கும் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. பின்னர் இருவரும் கணவன், மனைவியாக சேர்ந்து வாழ்ந்து வந்ததும் தெரிய வந்தது.

போலீசார் விசாரணை

சந்தோசின் தாய் மாலா முத்துப்பேட்டை போலீசில் எனது மகன் சாவில் சந்தேகம் உள்ளது என புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமான ஒரு மாதத்தில் புதுமாப்பிள்ளை தூக்கில் பிணமாக தொங்கிய சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்