ராமநாதபுரம்
மணமகனிடம் இருந்து தாலியை பறித்து உண்டியலில் போடச்சென்ற மணப்பெண்
|கோவிலில் திருமண ஏற்பாடுகள் நடந்து நேற்று முகூர்த்த நேரத்தில் மணமகனிடம் இருந்து தாலியை பறித்து உண்டியலில் போடச்சென்ற மணப்பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. திருமணம் நின்றது தெரியாமல் மாப்பிள்ளை வீட்டில் விருந்து சாப்பிட்டு உறவினர்கள் மொய் எழுதிச் சென்றனர்.
தொண்டி,
கோவிலில் திருமண ஏற்பாடுகள் நடந்து நேற்று முகூர்த்த நேரத்தில் மணமகனிடம் இருந்து தாலியை பறித்து உண்டியலில் போடச்சென்ற மணப்பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. திருமணம் நின்றது தெரியாமல் மாப்பிள்ளை வீட்டில் விருந்து சாப்பிட்டு உறவினர்கள் மொய் எழுதிச் சென்றனர்.
வெளிநாட்டில் வேலை
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 29 வயதான பட்டதாரி வாலிபர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்திருந்தார். அவருக்கு பக்கத்து கிராமத்தை சேர்ந்த 21 வயதான பட்டதாரி பெண்ணை பேசி முடித்து, இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் செய்துள்ளனர். ஒரு மாதத்திற்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது. இதை தொடர்ந்து இரு வீட்டாரும் திருமணத்துக்கான ஏற்பாடுகளை மும்முரமாக செய்து வந்தனர்.
நேற்று காலை திருவாடானையில் ஒரு கோவிலில் இவர்களது திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக மணமக்கள் வீட்டார், உறவினர்கள் முகூர்த்த நேரத்திற்கு கோவிலுக்கு வந்து விட்டனர்.
தாலியை பறித்த மணப்பெண்
கோவிலில் உள்ள அலுவலகத்தில் இருதரப்பினரின் முன்னிலையில் மணமக்கள் திருமண பதிவேட்டில் கையொப்பமிட்டனர். அதன் பின்னர் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து மணமகளும், மணமகனும் திருமணம் நடத்தப்படும் இடத்திற்கு வந்தனர்.
அங்கு உறவினர்கள் முன்னிலையில் மாலை மாற்றுதல் உள்ளிட்ட சடங்குகள் நடைபெற்றன. இந்த நிலையில் மணமகன், மணமகளின் கழுத்தில் தாலியை அணிவிக்க முயன்றார். அப்போது திடீரென்று மணப்பெண், மணமகனிடம் இருந்து தாலியை பறித்து கையில் வைத்துக் கொண்டார். மணப்பெண்ணின் இந்த செயலால் மணமகன் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அங்கிருந்த உறவினர்கள், அந்தப் பெண்ணிடம் தாலியை கொடுக்குமாறு கூறினர். ஆனால் அந்தப் பெண் விடாப்பிடியாக தாலியை தர மாட்டேன். உண்டியலில் தான் போடுவேன் எனக்கூறி போடச் சென்றதால் அனைவரும் திகைத்தனர். பின்னர் அந்த பெண், எனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்று கூறினார்.
போலீசில் புகார்
இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகன், "உனது சம்மதத்தோடு தானே எல்லா ஏற்பாடுகளும் செய்தோம். அப்போது எல்லாம் எதுவும் கூறாமல் முகூர்த்த நேரத்தில்் திடீரென இப்படி செய்தால் எப்படி?" என்று கேட்டுள்ளார். அதற்கு மணப்பெண், எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. எனது பெற்றோர்தான் இதற்கு ஏற்பாடு செய்தார்கள் என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து அங்கிருந்த பிரமுகர்கள், உறவினர்கள் இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. உடனே மணமகன் இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசாரும், கோவிலுக்கு வந்து விசாரணை நடத்தினர். அதன் பிறகு இரு தரப்பினரும் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர்.
"திருமண ஏற்பாடுகளுக்காக ரூ.3 லட்சத்துக்கு மேல் பணம் செலவாகி உள்ளது. எனக்கு மிகுந்த மனஉளைச்சல் ஏற்பட்டு உள்ளது. எனவே மணப்பெண், அவருடைய பெற்றோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மணமகன் புகார் செய்துள்ளார்.
மணப்பெண்ணோ, "தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை. பெற்றோர் கட்டாயத்தினால் சம்மதம் தெரிவித்தேன்" என புகார் அளித்திருக்கிறார்.
மொய் எழுதிய உறவினர்கள்
இதற்கிடையே மணமகளின் வீட்டில் இருந்து மணமகன் வீட்டிற்கு சீர்வரிசை பொருட்களும் சென்று இறங்கிவிட்டன.
மாப்பிள்ளை வீட்டில் திருமண விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அங்கு சென்றவர்கள், நடந்த நிகழ்வுகள் பற்றி அறியாமல் அங்கு சாப்பிட்டு விட்டு மொய் எழுதி சென்றதும் நடந்துள்ளது..
கோவிலில் உறவினர்கள் முன்னிலையில், மணப்பெண்ணே தாலியை பறித்து திருமணத்தை நிறுத்தியது அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.