< Back
மாநில செய்திகள்
காலில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை மறைப்பு: திருமணமான சில நிமிடங்களிலேயே மாப்பிள்ளையை உதறித்தள்ளிய மணப்பெண்...!
மாநில செய்திகள்

காலில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை மறைப்பு: திருமணமான சில நிமிடங்களிலேயே மாப்பிள்ளையை உதறித்தள்ளிய மணப்பெண்...!

Lingavel Murugan M
|
2 Sept 2022 10:24 AM IST

திருப்பூரில் திருமணமான சில நிமிடங்களிலேயே மாப்பிள்ளையை மணப்பெண் உதறித்தள்ளியுள்ளார்.

திருப்பூர்,

திருப்பூர் பி.என்.ரோடு பூலுவப்பட்டி பகுதியை சேர்ந்த 32 வயதான பனியன் நிறுவன ஊழியருக்கும், 25 வயது இளம்பெண் ஒருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையடுத்து இரு வீட்டாரும் திருமண பத்திரிகை அச்சடித்து, திருமணத்திற்கான ஏற்பாடுகளை தடல்புடலாக செய்து வந்தனர்.

நேற்று காலை பூலுவப்பட்டியில் உள்ள ஒரு கோவிலில் உறவினர்கள் புடைசூழ இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இருவரும் சம்பிரதாயப்படி கோவிலில் பூஜை செய்து, ஒருவொருக்கொருவர் மாலை மாற்றி பெற்றோர், உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

இதன் பின்பு அதே பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது இரு வீட்டாரும் முறைப்படி பல்வேறு சீர்வரிசைகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது மணமகனின் காலை பார்த்த மணமகள், 2 கால்களில் ஒரு கால் மட்டும் வித்தியாசமாக இருப்பதை கண்டார். இதுகுறித்து மணமகள் கேட்டபோது, ஒரு விபத்தில் அடிபட்டு அறுவை சிகிச்சை செய்திருப்பதாக மணமகன் தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மணமகள் அதை தன்னிடம் முன்பாகவே கூறாமல் மறைத்து விட்டதாக கூறி, தனக்கு இந்த திருமணத்தில் உடன்பாடு இல்லை என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு கூடியிருந்த உறவினர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் இந்த பிரச்சினை போலீஸ் நிலையம் வரை சென்றது. திருப்பூர் கொங்குநகர் சரக அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சென்ற மணமகன், மணமகள் மற்றும் இருவரின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் இதுதொடர்பாக போலீசாரிடம் முறையிட்டனர். அப்போது காலில் அறுவை சிகிச்சை செய்ததை மறைத்து திருமணம் செய்ததாக மணமகளும், அவருடைய பெற்றோரும் தெரிவித்தனர்.

மேலும் மணமகன் சரிவர வேலைக்கு செல்லாமல் இருப்பதால் இந்த திருமணத்தில் உடன்பாடு இல்லை என்றும் அவர்கள் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து இரு குடும்பத்தினரிடமும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இறுதியாக இருவரும் திருமண பந்தத்தில் இருந்து பிரிந்து கொள்வதாக ஒப்புக் கொண்டனர். இதனால் இரு குடும்பத்தினரும் அங்கிருந்து தனித்தனியே புறப்பட்டு சென்றனர். திருப்பூரில் திருமணமான சில நிமிடங்களில் மணமேடையிலேயே மணமகனை மணமகள் உதறிவிட்டுச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்