< Back
மாநில செய்திகள்
செல்போனை சிறுவன் பறித்ததால் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த பயணி - கை, கால் துண்டான பரிதாபம்
சென்னை
மாநில செய்திகள்

செல்போனை சிறுவன் பறித்ததால் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த பயணி - கை, கால் துண்டான பரிதாபம்

தினத்தந்தி
|
21 March 2023 12:14 PM IST

ஓடும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் செல்போனை சிறுவன் பறித்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பயணியின் கை, வலது கால் துண்டானது. செல்போன் பறிப்பில் ஈடுப்பட்ட 15 வயது சிறுவனை ரெயில்வே போலீஸ் கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை சேர்ந்தவர் அப்துல்கரீம் (வயது 40). இவர் செல்போன் சர்வீஸ் கடை நடத்தி வருக்கிறார். இந்த நிலையில் கடைக்கு தேவையான உதிரி பாகங்களை வாங்குவதற்காக சென்னை வந்தார். அண்ணா சாலை ரிச் தெருவில் உள்ள மொத்தக்கடையில் பொருட்களை வாங்கினார். பின்னர் அவர் தனது நண்பருடன் சென்டிரல் ரெயில் நிலையத்திலிருந்து ஏலகிரி எக்ஸ்பிரஸ் மூலம் வாணியம்பாடிக்கு புறப்பட்டார்.

இந்த ரெயில் பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையம் அருகே மெதுவாக சென்று கொண்டிருந்தது. அப்துல்கரீம் படியில் நின்று கொண்டு செல்போன் பேசியதாக தெரிகிறது. அப்போது தண்டவாளம் அருகே நின்று கொண்டிருந்த ஒருவர் அப்துல்கரீம் கையில் வைத்திருந்த செல்போனை சர்ரென்று பறித்தான். இதில் நிலை தடுமாறி அப்துல்கரீம் ரெயிலில் இருந்து கீழே விழுந்தார். தண்டவாளத்தின் நடுவே விழுந்ததால் ரெயிலில் சிக்கினார். இதில் அவரது இடது கை, வலது கால் துண்டானது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை ரெயில்வே போலீசார் மீட்டு ஸ்டான்லி அரசுமருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்த நிலையில் அப்துல்கரீமிடம் செல்போன் பறிப்பில் ஈடுப்பட்ட திருவள்ளுவர் மாவட்டத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் சென்னை சென்டிரல் ரெயில்வே போலீசாரிடம் சிக்கினான். விசாரணையில், அந்த சிறுவன் அப்துல் கரீமிடம் பறித்த செல்போனை பாரிமுனைக்கு சென்று ரூ.1700 விற்றுள்ளான், இதில் ஆட்டோ பயணத்திற்கு ரூ.500 செலவு செய்துள்ளான். ரூ.500-க்கு மது வாங்கி அருந்தியது தெரியவந்தது. பின்னர் அந்த சிறுவன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு கெல்லிசில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டான்.

மேலும் செய்திகள்