அரியலூர்
தோட்டத்தில் அமைக்கப்பட்டு இருந்த மின்வேலியில் சிக்கி சிறுவன் பலி
|செந்துறை அருகே தோட்டத்தில் அமைக்கப்பட்டு இருந்த மின் வேலியில் சிக்கி சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
மின்சார வேலி
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குவாகம் கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன், கூலித்தொழிலாளி. இவருடைய மகன் அருண்குமார் (வயது 17). இவர் 10-ம் வகுப்பு முடித்துவிட்டு அதே கிராமத்தில் உள்ள ராதாகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான ஆடுகளை மேய்க்கும் வேலையை செய்து வந்தார்.
இந்தநிலையில், ராமச்சந்திரன் என்பவரது தோட்டத்தில் ஆடுகளை மேய்பதற்காக பட்டி போட்டு இருந்தார். மேலும், நாய் தொல்லையை கட்டுப்படுத்துவதற்காக அப்பகுதியில் அருண்குமார் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் மின்சார வேலி அமைத்ததாக கூறப்படுகிறது.
மின்சாரம் பாய்ந்து பலி
நேற்று காலை வழக்கம்போல் அருண்குமார் தோட்டத்திற்கு வந்தார். அப்போது மின்சார வேலியில் தனது நண்பர்கள் மின்சாரத்தை துண்டித்து இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் அதன் மீது கை வைத்துள்ளார். ஆனால் இரவில் செலுத்தப்பட்ட மின்சாரம் துண்டிக்கப்படாமல் இருந்த நிலையில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அருண்குமார் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த குவாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து குவாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.