வேலூர்
கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் சாவு
|பள்ளிகொண்டா அருகே கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் சாவு
அணைக்கட்டு
பள்ளிகொண்டாவை அடுத்த வல்லண்டராமம் காட்டுக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் பெரியண்ணன். இவரது மகன் சத்தியமூர்த்தி (வயது 11). 6-ம் வகுப்பு படித்து வந்தான்.
இன்று மாலை சத்தியமூர்த்தி, தனது தம்பி மோகன்குமாருடன் அருகில் உள்ள விவசாய கிணற்றில் குளிக்க சென்றுள்ளான். மோகன்குமார் கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தான். தம்பி குளிப்பதை கிணற்று படிக்கட்டில் அமர்ந்து சத்தியமூர்த்தி பார்த்துக்கொண்டிருந்தான்.
அப்போது திடீரென சத்தியமூர்த்தி கிணற்றில் தவறி விழுந்துள்ளான். உடனே மோகன்குமார் வீட்டுக்கு சென்று பெற்றோரை அழைத்து வந்தான்.
நீண்ட நேரம் போராடியும் சத்தியமூர்த்தியை அவர்களால் காப்பாற்ற முடியவில்லை.
இதுகுறித்து வேலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் தணிகைவேல் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று 4 மணிநேர போராட்டத்திற்கு பிறகு சத்தியமூர்த்தியை பிணமாக மீட்டனர்.
இதுகுறித்து பள்ளிகொண்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.