தஞ்சாவூர்
இறந்தவரின் உடலை 2 கி.மீ. தூரம் தோளில் சுமந்து செல்லும் அவலம்
|இறந்தவரின் உடலை 2 கி.மீ. தூரம் தோளில் சுமந்து செல்லும் அவலம்
திருச்சிற்றம்பலம் அருகே மயானத்திற்கு செல்லும் சேறும், சகதியுமான சாலையில் இறந்தவரின் உடலை 2 கிலோ மீட்டர் தூரம் தோளில் சுமந்து செல்ல வேண்டிய அவலம் உள்ளது. எனவே தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொது மயானம்
பேராவூரணி ஒன்றியம் ஒன்றியம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள வா. கொல்லைக்காடு ஊராட்சியில் வழுதலை வட்டம் கிராமம் உள்ளது. இக் கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட விவசாய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்காக அதே பகுதியில் ஒரு பொது மயானம் அமைந்துள்ளது.
தோளில் சுமந்து செல்லும் அவலம்
இந்தநிலையில் மக்கள் வசிக்கும் குடியிருப்புக்கும் பொதுமயானம் அமைந்துள்ள இடத்துக்கும் 2 கிேலா மீட்டர் தூரமாகும். மேலும் நான்கு புறமும் வயல்கள் சூழ்ந்த பகுதியின் மத்தியில் அமைந்துள்ள மயானத்திற்கு மண் சாலை செல்கிறது. சேறும், சகதியுமாக காணப்படும் இந்த சாலை வழியாக இறந்தவரின் உடலை 2 கிலோமீட்டர் தூரம் தோளில் சுமந்து செல்லும் அவல நிலை உள்ளது. இந்த நிலை பல ஆண்டுகளாக அந்த பகுதியில் தொடர்கிறது.
தார்ச்சாலை
எனவே வழுதலை வட்டம் கிராமத்தில் உள்ள பொது மயானத்திற்கு செல்லும் 2 கிலோ மீட்டர் மண் சாலையை தார்ச்சாலையாக அமைத்து தர வேண்டும் என வா.கொல்லைக்காடு ஊராட்சி மன்ற தலைவர் பரமேஸ்வரி பன்னீர்செல்வம் மற்றும் வழுதலை வட்டம் கிராம மக்கள் தஞ்சை மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.