< Back
மாநில செய்திகள்
தனுஷ்கோடி கடற்கரையில் ஒதுங்கிய தூத்துக்குடி மீனவரின் உடல்..!
மாநில செய்திகள்

தனுஷ்கோடி கடற்கரையில் ஒதுங்கிய தூத்துக்குடி மீனவரின் உடல்..!

தினத்தந்தி
|
26 Jun 2022 6:07 PM IST

தூத்துக்குடி பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்று கடலில் தவறி விழுந்த மீனவரின் உடல் தனுஷ்கோடி கடற்கரையில் ஒதுங்கியது.

ராமேஸ்வரம்:

ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி ஒத்தப்பட்டி கடற்கரையில் உடல் ஒன்று கரை ஒதுங்கிக் கிடப்பதாக மீனவர்கள் கடலோர போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதைத்தொடர்ந்து ராமேஸ்வரம் கடலோர காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். கடற்கரையில் தலையில்லாமல் ஒதுங்கி கிடந்த உடலை கைப்பற்றி விசாரணை செய்தனர்.

இந்த விசாரணையில் இறந்து கிடந்த மீனவர் உடலானது தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் பகுதியிலிருந்து கடந்த 15 ஆம் தேதி அன்று ஒரு விசைப்படகில் 7 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றதாகவும், அப்போது இந்த படகிலிருந்து மீனவர் ஒருவர் தவறி கடலில் விழுந்துள்ளார். இதுகுறித்து மீனவர்கள் தூத்துக்குடி தருவைகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில் தனுஷ்கோடி கடற்கரையில் இறந்து கிடந்த இந்த மீனவரின் உடலை அடையாளம் பார்த்ததில் இந்த மீனவரின் உடலானது தூத்துக்குடி தருவைக்குளம் பகுதியிலிருந்து விசைப்படகில் மீன்பிடிக்க சென்று கடலில் தவறி விழுந்த மீனவர் என்பதும் தெரியவந்தது.

மேலும் இந்த மீனவர் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள வாலிநோக்கம் பகுதியை சேர்ந்த முகமது அலி ஜின்னா என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் மீனவரின் உடலானது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்