< Back
மாநில செய்திகள்
ஈராக்கில் இருந்து கொண்டு வரப்பட்ட நத்தம் தொழிலாளியின் உடல்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

ஈராக்கில் இருந்து கொண்டு வரப்பட்ட நத்தம் தொழிலாளியின் உடல்

தினத்தந்தி
|
8 Sept 2023 6:00 AM IST

வேலைக்கு சென்ற இடத்தில் திடீரென இறந்த தொழிலாளியின் உடல், ஈராக்கில் இருந்து நத்தம் கொண்டு வரப்பட்டது. அவருடைய உடலை பார்த்து மனைவி, உறவினர்கள் கதறி அழுதனர்.

கட்டிடத்தொழிலாளி சாவு

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள மூங்கில்பட்டியை சேர்ந்தவர் சின்னையா (வயது 45). கட்டிட தொழிலாளி. இவர், ஈராக் நாட்டுக்கு சென்று கட்டிட வேலை செய்து வந்தார். கடந்த மாதம் 1-ந்தேதி இவர் திடீரென இறந்தார்.

இதுகுறித்து ஈராக்கில் இருந்து இந்திய தூதரக அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவர்கள், மூங்கில்பட்டியில் உள்ள சின்னையாவின் குடும்பத்தினரிடம் இந்த தகவலை தெரிவித்தனர். இதனால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்தநிலையில் சின்னையாவின் உடலை, தங்களது சொந்த கிராமத்துக்கு கொண்டு வருவதற்கான முயற்சியில் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டனர். இதுகுறித்து அவரது மனைவி கோகிலா, நத்தம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தாரிடம் கோரிக்கை மனு கொடுத்தார்.

சொந்த ஊருக்கு வந்த உடல்

இதேபோல் கலெக்டர் பூங்கொடியிடமும் கோகிலா மனு அளித்தார். அதில், ஈராக்கில் இறந்த தனது கணவரின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர அரசு நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதுதொடர்பாக தமிழக அரசு மூலம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனையடுத்து மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கையின் பேரில், கடந்த 38 நாட்களுக்கு பிறகு சின்னையாவின் உடல் ஈராக்கில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.

பின்பு சென்னையில் இருந்து சின்னையாவின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான மூங்கில்பட்டிக்கு உறவினர்கள் கொண்டு வந்தனர். சின்னையாவின் உடலை பார்த்து அவரது மனைவியும், உறவினர்களும் கதறி அழுதனர். இந்த காட்சி காண்போரின் கண்களை குளமாக்கியது. பின்னர் அவருடைய உடலுக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டு, மூங்கில்பட்டி மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

Related Tags :
மேலும் செய்திகள்