< Back
மாநில செய்திகள்
தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது
நீலகிரி
மாநில செய்திகள்

தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது

தினத்தந்தி
|
9 July 2023 2:00 AM IST

பந்தலூரில் பலத்த மழை பெய்தது. கொளப்பள்ளி அருகே தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

பந்தலூர்

பந்தலூரில் பலத்த மழை பெய்தது. கொளப்பள்ளி அருகே தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

பலத்த மழை

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. குறிப்பாக பந்தலூர், கூடலூர் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. பந்தலூர், உப்பட்டி, பொன்னானி, சேரம்பாடி, தாளூர், கொளப்பள்ளி, அய்யன்கொல்லி, பாட்டவயல், நெலாக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. சில இடங்களில் மின் கம்பங்கள் மீது மரக்கிளைகள் விழுந்தன. இதனால் மின்தடை ஏற்பட்டது.

பொன்னானி, சேரம்பாடி, சோலாடி ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பந்தலூர் வருவாய் ஆய்வாளர் அலுவலக சாலையில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் வாகனங்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்தபடி சென்றன. மழை காரணமாக கடுங்குளிர் நிலவுகிறது.

பெரும்பாலான அரசு பஸ்களின் மேற்கூரைகள் பழுதடைந்து இருந்ததால், மழைநீர் ஒழுகியது. இதனால் பயணிகள் நனைந்தபடி பயணம் செய்தனர். சிலர் பஸ்சுக்குள் குடைகளை பிடித்த படி பயணித்தனர்.

மண் சரிவு

பஸ் இருக்கைகள் நனைந்ததால் அமர்ந்து பயணம் செய்ய முடியாமல் பயணிகள் அவதியடைந்தனர். பழுதடைந்த பஸ்களை சீரமைக்கவும், புதிய பஸ்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். கொளப்பள்ளி அருகே எடத்தால் கிராமத்துக்கு கொளப்பள்ளி அரசு தொடக்கப் பள்ளியில் இருந்து சாலை செல்கிறது. தொடர் மழை காரணமாக சாலையோரத்தில் இருந்த தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது. அங்கு மண் சரிவு ஏற்பட்டு உள்ளது.இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நீலகிரியில் பெய்து வரும் தொடர் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

ஊட்டி-10.3, நடுவட்டம்-19, கல்லட்டி-5.3, கிளன்மார்கன்-9, குந்தா-10, அவலாஞ்சி-89, எமரால்டு-24, அப்பர்பவானி-46, பாலகொலா-9, கூடலூர்-58, மேல் கூடலூர்-55, தேவாலா-97, செருமுள்ளி-28, பாடந்தொரை-33, ஓவேலி-38, பந்தலூர்-92, சேரங்கோடு-61 என மொத்தம் 711.6 மி.மீட்டர் மழை பெய்து உள்ளது. சராசரியாக 24.54 மி.மீ. பதிவாகி இருக்கிறது. அதிகபட்சமாக தேவாலாவில் 10 செ.மீ. மழை பெய்தது.

மேலும் செய்திகள்