விருதுநகர்
தடுப்பணையை சீரமைக்க வேண்டும்
|வெம்பக்ேகாட்டை அருகே தடுப்பணையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாயில்பட்டி,
வெம்பக்ேகாட்டை அருகே தடுப்பணையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேதமடைந்த தடுப்பணை
வெம்பக்கோட்டை அருகே காயல்குடி ஆறு வைப்பாறு இணையும் இடத்தில் குண்டாயிருப்பு கிராமத்தில் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு பெய்த மழைக்கு தடுப்பணை முற்றிலும் சேதம் அடைந்து தண்ணீர் வெளியே சென்றது. இதனால் இப்பகுதியை சேர்ந்த மக்கள் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
தற்போது மழைக்காலம் தொடங்கி உள்ளதால் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணை நிரம்பி வருகிறது. ஆனால் தற்போது வரை அணை சீரமைக்கப்படவில்லை.
தடுப்புச்சுவர்
தொடர் மழை காரணமாக குண்டாயிருப்பு, பாறைப்பட்டி, ஜமீன் கல்லமநாயக்கன்பட்டி, எதிர்க்கோட்டை, சுந்தரராஜபுரம், மாதாங்கோவில்பட்டி, சுப்பிரமணியபுரம், கே.லட்சுமியாபுரம், கங்கர் சேவல் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம மக்கள் நெல், பருத்தி, மக்காச்சோளம் ஆகியவற்றை அதிக அளவில் சாகுபடி செய்துள்ளனர்.
தடுப்பணை சேதமடைந்த இடத்தில் தற்காலிகமாக மண் போட்டு மூடினர். தடுப்பு சுவர் அமைக்கப்படாதால் தற்போது பெய்து வரும் மழையினால் மீண்டும் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது. ஆகையால் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மண்மேட்டிற்கு பதிலாக தடுப்புச்சுவரை சீரமைத்து நிரந்தரமாக தண்ணீர் வெளியேறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாய சங்கத்தினர் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.