திண்டுக்கல்
சாலையில் உலா வந்த காட்டெருமை
|கொடைக்கானலில் சாலையில் உலா வந்த காட்டெருமையை பார்த்து பொதுமக்கள் அலறியடித்து ஓடினர்.
கொடைக்கானல் மலைப்பகுதியில் காட்டெருமை, குரங்கு உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. கடந்த சில நாட்களாக நகர் பகுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் காட்டெருமைகள் உலா வருவது வாடிக்கையாகி உள்ளது. இந்தநிலையில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் இடமான 7 ரோடு சந்திப்பு, கவி தியாகராஜர் சாலையில் காட்டெருமை ஒன்று உலா வந்தது. இதனால் சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அதேபோல் வாகனங்களில் வந்தவர்கள் அச்சத்துடன் காட்டெருமையை கடந்து சென்றனர். மேலும் காட்ெடருமை உலா வந்ததால் வாகனங்களை இயக்க முடியாமல் சிலர் தவித்தனர். இதனால் கவி தியாகராஜர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் அந்த காட்டெருமை தோட்டத்துக்குள் புகுந்தது. அதன்பிறகே பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். எனவே நகர் பகுதிக்குள் காட்டெருமை நுழைவதை தடுக்க சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.