விழுப்புரம்
கரும்புக்கான நிலுவைத்தொகை ரூ.75 கோடியை விரைந்து பெற்றுத்தர வேண்டும்
|சர்க்கரை ஆலைகளிடமிருந்து கரும்புக்கான நிலுவைத்தொகை ரூ.75 கோடியை விரைந்து பெற்றுத்தர வேண்டும் என்று விழுப்புரத்தில் நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்
விழுப்புரம்
விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் சி.பழனி தலைமை தாங்கி விவசாயிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்த கோரிக்கைகள் விவரம் வருமாறு:-
விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு உடைந்து 1½ ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் சீரமைக்கப்படாததால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே புதிய அணைக்கட்டு கட்டும் பணியை விரைந்து தொடங்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய ரூ.75 கோடி நிலுவைத்தொகையை விரைந்து பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். பில்லூர் கிராமத்தில் தானிய உலர்களம் ஆக்கிரமிப்பில் உள்ளது. அந்த ஆக்கிரமிப்பை உடனே அகற்ற வேண்டும்.
கால்நடைகளுக்கு மடிநோய்
விழுப்புரத்தை சுற்றி உள்ள சுங்கச்சாவடிகளில் விவசாய விளைபொருட்களை கொண்டு செல்லும் விவசாயிகளிடம் சுங்கவரி வசூலிப்பதில் விலக்கு அளிக்க வேண்டும். தற்போது கால்நடைகளை மடிநோய் பரவலாக தாக்கி வருவதால் கால்நடை மருத்துவர்கள் மூலம் சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
விழுப்புரம், திண்டிவனம், விக்கிரவாண்டி, செஞ்சி ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் உடனுக்குடன் பணம் பட்டுவாடா செய்ய வேண்டும். அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் செப்டம்பர் மாதம் வரை செயல்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சின்னதச்சூர் கூட்டுறவு வங்கியில் ரூ.85 லட்சம் கையாடல் செய்த 4 பேரையும் கைது செய்ய வேண்டும். அதேநேரத்தில் விவசாயிகளுக்கு சேர வேண்டிய பணத்தையும் விரைவாக கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
மணல் கொள்ளை
கலிஞ்சிக்குப்பம் தென்பெண்ணையாற்றில் மணல் கொள்ளை நடக்கிறது. இதற்காக இரவு நேரங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. திருட்டு மணல் அள்ளிச் சென்ற பின்னர் மின் இணைப்பு வழங்கப்படுகிறது. மின்வாரியத்துறையினரும், போலீசாரும் என்ன செய்கிறார்கள்? மழைக்காலம் தொடங்குவதற்குள் நீர்வழிப்பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இதற்கு பதிலளித்து மாவட்ட கலெக்டர் சி.பழனி பேசுகையில், எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டை கட்டுவதற்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. விரைவில் புதிய அணைக்கட்டு கட்டப்படும். கரும்பு நிலுவைத்தொகையை சர்க்கரை ஆலைகள் விரைவில் வழங்க ஏற்பாடு செய்யப்படும். ஈச்சங்குப்பம் ஏரி ஆக்கிரமிப்பை வருகிற 10-ந் தேதிக்குள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த மாதம் பெறப்பட்ட மனுக்களில் 70 சதவீத மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மற்ற மனுக்கள் மீதும் விரைந்து தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் கட்டணமில்லா தொலைபேசி சேவையை அமைத்துக்கொடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோடை உழவிற்கான அரசு மானியம் குறித்து விவசாயிகளுக்கு தெரியப்படுத்தி உழவன் செயலி மூலம் விண்ணப்பிக்கும் முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.