மாணவி மரணத்தின் பின்னணியை ஆய்வு செய்து, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
|கள்ளக்குறிச்சி மாணவியின் மரணத்தின் பின்னணியை ஆய்வு செய்து, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
கள்ளக்குறிச்சி மாணவியின் மர்ம மரணத்தின் பின்னணியை ஆய்வு செய்து, தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூர் பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியும், மனவேதனையும் அளிக்கிறது. மாணவியை இழந்து தவிக்கும் அவரது பெற்றோருக்கும், அப்பகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாளைய சமூகத்தின் நம்பிக்கை நட்சத்திரங்களான மாணவச் செல்வங்களுக்கு தரமான கல்வியை அளிப்பதுடன், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும் அரசின் தலையாய கடமை என்பதை கருத்தில் கொண்டு, மாணவியின் மர்ம மரணத்தின் பின்னணியை ஆய்வு செய்து, தமிழ்நாடு அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அஇஅதிமுக சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.