அசதியில் ஓய்வெடுத்த குட்டி... அரவணைத்து நின்ற தாய்யானை
|கடுமையான வெயிலின் தாக்கம் இருந்ததால் திடீரென குட்டி யானை தாயின் அருகே படுத்து ஓய்வெடுக்க தொடங்கியது.
கோவை,
வால்பாறையில் உள்ள சிறுகுன்றா எஸ்டேட்டில் உள்ள தேயிலை தோட்டத்தின் அருகில் குட்டியுடன் 11 காட்டு யானைகள் நேற்று அதிகாலை முதலே முகாமிட்டு நின்று கொண்டிருந்தன. பின்னர் அந்த யானைகள் ஈட்டியார் எஸ்டேட் வனப்பகுதிக்குள் சென்றன.
இதைத் தொடர்ந்து மதியம் 2 மணியளவில் வனப்பகுதியில் இருந்து குட்டியுடன் 4 காட்டு யானைகள் வெளியே வந்தன. இந்த காட்டு யானைகள் சிறுகுன்றா எஸ்டேட் தேயிலை தோட்டத்திற்குள் நுழைந்தன. இந்த யானைகள் தேயிலை தோட்டத்திலேயே உலா வந்த வண்ணம் இருந்தன.அப்போது அந்த கூட்டத்துடன் வந்த குட்டியானை நடையில் சோர்வடைந்து தள்ளாடிய படியே வந்தது. இதனை பார்த்த அதன் தாய் யானை, குட்டியை பிரியாமலே வந்து கொண்டிருந்தது.
ஒரு கட்டத்தில் அந்த குட்டி யானை தேயிலை தோட்டத்தின் அருகில் நிற்க தொடங்கியது. குட்டிநின்றதும் தாய் யானையும் அதனுடன் நின்று கொண்டது. இந்த நிலையில் கடுமையான வெயிலின் தாக்கம் வேறு இருந்ததால், திடீரென குட்டி யானை தாயின் அருகே படுத்து ஓய்வெடுக்க தொடங்கியது. ஹாயாக படுத்த சிறிது நேரத்தில் கண் மூடி தூங்கியும் விட்டது. தேயிலை தோட்டத்திற்கு மத்தியில் குட்டி யானை படுத்து ஓய்வு எடுக்க, தாய் யானை குட்டியை சுற்றி சுற்றி வந்து பாசத்துடன் அரவணைத்து பாதுகாப்பில் ஈடுபட்டது பார்க்க, பார்க்க சுவாரஸ்யமாக இருந்தது.
இதனை அந்த வழியாக சென்றவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.மேலும் சிலர் இதனை புகைப்படம், வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். இந்த காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது.