சென்னை
வீட்டுக்குள் மறைந்து இருந்து கொள்ளையனை மடக்கி பிடித்த ஆட்டோ டிரைவர் - மனைவியுடன் சேர்ந்து பொறி வைத்து பிடித்தார்
|வீட்டின் பூட்டை உடைக்காமல் தொடர்ந்து கைவரிசை காட்டிய கொள்ளையனை, வீட்டுக்குள் மறைந்து இருந்து ஆட்டோ டிரைவர் மடக்கி பிடித்தார்.
சென்னை வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம், அன்னை சத்யா நகர், 4-வது தெருவைச் சேர்ந்தவர் நல்லசிவம் (வயது 30). ஆட்டோ டிரைவர். இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியே சென்று விட்டார். இரவு வீடு திரும்பியபோது வீட்டில் இருந்த ரூ.5 ஆயிரம் மாயமாகி இருந்தது.
இதேபோல் அடுத்தடுத்து 3 முறை அவரது வீட்டில் இருந்து சுமார் ரூ.20 ஆயிரம் வரை திருடுபோய் இருந்தது. ஆனால் வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்படாமல் அப்படியே இருந்தது.
வீட்டில் இருந்து ஆட்கள் வெளியே சென்றதும், அதனை நோட்டமிட்டு மர்மநபர் கைவரிசை காட்டி வருவது தெரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நல்லசிவம், தனது வீட்டில் தொடர்ந்து கைவரிசை காட்டிவரும் கொள்ளையனை கையும் களவுமாக மடக்கி பிடிக்க எண்ணினார். இதுபற்றி தனது மனைவியிடம் தெரிவித்தார். பின்னர் இருவரும் சேர்ந்து கொள்ளையனை பிடிக்க திட்டமிட்டனர்.
பின்னர் இருவரின் யோசனைப்படி சம்பவத்தன்று நல்லசிவம் வீட்டுக்குள் மறைந்து இருந்து கொண்டு, மனைவியை மட்டும் வீட்டின் கதவை பூட்டிவிட்டு வெளியே செல்லுமாறு கூறினார். அதன்படி வழக்கம்போல் நல்லசிவத்தின் மனைவி வீட்டின் கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு எதுவும் தெரியாததுபோல வெளியே சென்று விட்டார்.
சிறிது நேரத்தில் அங்குவந்த மர்மநபர் ஒருவர், நல்லசிவம் வீட்டின் பூட்டை உடைக்காமல் லாவகமாக கதவை திறந்து உள்ளே புகுந்தார். வீட்டுக்குள் மறைந்து இருந்த நல்லசிவம், கொள்ளையன் வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டுக்குள் உரிமையாளர் இருப்பதை பார்த்து திடுக்கிட்ட கொள்ளையன், அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றான். பல நாள் திருடன் சிக்கியதால் ஆவேசம் அடைந்த நல்லசிவம், பாய்ந்து சென்று கொள்ளையைனை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம், பக்கத்தினரும் கொள்ளையனுக்கு தர்ம அடி கொடுத்தனர். பின்னர் பிடிபட்ட கொள்ளையனை கண்டு அவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
காரணம், நல்லசிவம் வீட்டில் தொடர் திருட்டில் ஈடுபட்டது அவரது பக்கத்து வீட்டில் வாடகைக்கு வசிக்கும் மணிகண்டன்(26) என்பது தெரியவந்தது. அவரை ராமாபுரம் போலீசில் ஒப்படைத்தனர். அவரை கைது செய்த இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ், அவரிடம் மேலும் விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையில் இளநீர் வியாபாரம் செய்து வந்த மணிகண்டன், உல்லாசமாக செலவு செய்ய எண்ணி கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
நல்லசிவம் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றதும் மணிகண்டன், பூட்டை உடைக்காமல் பூட்டை பிடித்து இழுத்து கதவை லாவகமாக திறந்து வீட்டுக்குள் புகுந்து கைவரிசை காட்டி வந்துள்ளார்.
முதலில் வீட்டில் இருந்த பணம் மாயமானதால் நல்லசிவமும், அவருடைய மனைவியும் ஒருவர் மீது ஒருவர் சந்தேகம் அடைந்தனர். அதன்பிறகு தொடர்ந்து பணம் மாயமானதால் வெளியில் இருந்து வரும் மர்மநபர் திருடியது தெரியவந்தது. அதன் பின்னரே கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து திட்டமிட்டு கொள்ளையனை பொறி வைத்து மடக்கி பிடித்தனர்.
கைதான மணிகண்டன், நல்லசிவம் வீட்டில் 3 முறை கைவரிசை காட்டி பணத்தை சுருட்டியதாக தெரிவித்தார். திருடிய பணத்தில் புதிதாக செல்போன் வாங்கியதும், மீதி பணத்தை உல்லாசமாக செலவு செய்ததாகவும் தெரிவித்தார்.வீட்டுக்குள் உரிமையாளர் நல்லசிவம் மறைந்து இருப்பது தெரியாமல் வழக்கம் போல் மணிகண்டன் உற்சாகமாக பணத்தை சுருட்ட வந்தபோது வசமாக சிக்கிக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். கைதான மணிகண்டனிடம் இருந்து ரூ.5 ஆயிரம், ஒரு செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.