சென்னை
மனைவியை கத்தியால் குத்திய ஆட்டோ டிரைவர் போலீஸ் நிலையத்தில் சரண்
|சென்னை ஓட்டேரி மேட்டுப்பாளையத்தில் மனைவியை கத்தியால் குத்திய ஆட்டோ டிரைவர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.
சென்னை ஓட்டேரி மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 42). ஆட்டோ டிரைவர். இவருடை ய மனைவி சுசீலா (38). இவர்களுக்கு 2 வருடத்துக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 11 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது. நந்தகுமார் தனது வருமானத்தில் பாதியை அவருடைய தாய் மற்றும் தங்கைக்கு செலவு செய்து வந்ததாக தெரிகிறது.
இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவில் வழக்கம்போல் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நந்தகுமார், தனது மனைவி சுசீலாவை கத்தியால் சரமாரியாக குத்தினார்.
இதில் படுகாயம் அடைந்த சுசீலாவை அருகில் இருந்தவர்கள் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதற்கிடையில் நந்தகுமார், ஓட்டேரி போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். இதுபற்றி ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து நந்தகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.