< Back
மாநில செய்திகள்
அமைச்சர் செந்தில் பாலாஜி தம்பி மனைவி சொத்து முடக்கம்
மாநில செய்திகள்

அமைச்சர் செந்தில் பாலாஜி தம்பி மனைவி சொத்து முடக்கம்

தினத்தந்தி
|
10 Aug 2023 5:35 AM IST

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமார் மனைவி நிர்மலா பெயரில் கட்டிவரும் பங்களாவில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் நிர்மலாவின் சொத்து முடக்கப்பட்டது.

கரூர்,

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக தற்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜி இருந்தபோது வேலை வாங்கி தருவதாக கூறி லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஜூன் மாதம் 13-ந்தேதி சென்னை, கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அந்த சோதனையின் முடிவில், நள்ளிரவில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டதால் சென்னையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

2-வது முறையாக...

இந்நிலையில் கடந்த 3-ந்தேதி கரூரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் 2-வது முறையாக சோதனை நடத்தினர். அப்போது அம்பாள் நகரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளர் சங்கர் வீடு மற்றும் செங்குந்தபுரத்தில் உள்ள அவரது பைனான்ஸ் அலுவலகம், சின்னாண்டாங்கோவிலில் உள்ள தனலட்சுமி மார்பிள்ஸ் உரிமையாளர் பிரகாஷ் வீடு மற்றும் நிறுவனம், லக்கி டிரேடர்ஸ் உரிமையாளர் செந்தில் வீடு மற்றும் வடக்கு ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள லக்கி டிரேடர்ஸ் அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.

இந்த அமலாக்கத்துறை சோதனை 5-ந்தேதி நள்ளிரவு 1.30 மணி வரை நீடித்தது. இந்நிலையில் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய பங்களாவில் சோதனை

இந்நிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார், இவரது மனைவி நிர்மலா பெயரில் கரூர்-சேலம் பைபாஸ் சாலை ராம்நகரில் புதிதாக கட்டிவரும் பங்களாவில் சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து 2 கார்களில் வந்த 5-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனை இரவிலும் நீடித்தது.

இதற்கிடையில் அங்கிருந்து ஒரு காரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீட்டிற்கும் சென்றனர். அப்போது வீடு பூட்டப்பட்டு இருந்தது.

சம்மன்

இதனையடுத்து அந்த வீட்டில் சம்மன் நோட்டீசை அதிகாரிகள் ஒட்டினர். நிர்மலா பெயர் குறிப்பிடப்பட்டு இருந்த அந்த நோட்டீசில், விசாரணைக்கு நேரில் நிர்மலா ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

சொத்து முடக்கம்

இந்த நிலையில் கரூர் மாவட்டம் மேலகரூர் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் ஒன்றை நேற்று அனுப்பியுள்ளது. அந்த நோட்டீசை அமலாக்கத் துறையின் உதவி இயக்குனர் பிரிஜேஷ் அனுப்பியுள்ளார்.

அதில், கரூரில் சேலம் பைபாஸ் சாலை, ஆன்டன்கோவில் கிழக்கு என்ற முகவரியில் உள்ள நிர்மலாவின் 2.49 ஏக்கர் சொத்து முடக்கப்பட்டுள்ளது.

எனவே அந்த சொத்தை, அமலாக்கத் துறையின் இணை இயக்குனரின் முன்அனுமதி இல்லாமல் வேறு யாருக்கும் மாற்ற முடியாது என்று அறிவிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்