சென்னை
விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை ஓட்டி பார்ப்பதாக கூறி திருடிச்சென்ற ஆசாமி
|வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை ஓட்டி பார்ப்பதாக கூறி திருடிச்சென்ற ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை அண்ணா நகரை சேர்ந்தவர் துலிப் (வயது 30). இவர் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரூ.13 லட்சம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிளை வைத்திருந்தார். அதனை விற்பனை செய்வதற்காக ஆன்லைனில், மோட்டார் சைக்கிள் புகைப்படத்துடன் விளம்பரம் செய்திருந்தார். அந்த விளம்பரத்தை பார்த்து ஏராளமானோர் அவரிடம் பேசி வந்தனர். இதனால் தான் வெளியே சென்று விட்டால் மோட்டார் சைக்கிளை வாங்க வருபவர்கள் பார்ப்பதற்கு வசதியாக வீட்டின் காவலாளிடம் மோட்டார் சைக்கிளின் சாவியை கொடுத்து வைத்திருந்தார்.
நேற்று முன்தினம் ஆன்லைனில் விளம்பரத்தை பார்த்துவிட்டு அந்த விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை தான் வாங்க விரும்புவதாக மர்ம ஆசாமி ஒருவர், துலிப்பிடம் பேசினார். மேலும் தான், மோட்டார் சைக்கிளை ஓட்டிப்பார்க்க வேண்டும் எனவும் கூறினார்.
அதற்கு துலிப், தான் தற்போது வெளியே இருப்பதால், காவலாளியிடம் மோட்டார் சைக்கிள் சாவி இருப்பதாகவும், அதனை வாங்கி ஓட்டி பார்க்கும்படியும் கூறினார்.
அதன்படி அந்த ஆசாமி, காவலாளியிடம் சென்று சாவியை கேட்டார். அவரும் கொடுத்தார். மர்ம ஆசாமி, மோட்டார் சைக்கிளை வாங்குவதுபோல் வாகனத்தை சுற்றும் முற்றும் பார்த்தார்.
பின்னர் மோட்டார் சைக்கிளை ஓட்டி பார்த்துவிட்டு வருவதாக காவலாளியிடம் கூறிச்சென்ற ஆசாமி, நீண்டநேரம் ஆகியும் திரும்பி வரவில்லை. மோட்டார் சைக்கிளுடன் அவர் மாயமாகி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த காவலாளி, இது குறித்து துலிப்புக்கு தகவல் தெரிவித்தார்.
அவர், மர்மஆசாமி தன்னிடம் தொடர்பு கொண்டு பேசிய செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டார். செல்போன் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது. பின்னர்தான் மர்மஆசாமி, மோட்டார் சைக்கிளை ஓட்டிப்பார்ப்பது போல் நடித்து திருடிச்சென்று விட்டதை அறிந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த துலிப், இதுபற்றி அண்ணா நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். தனது வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்மநபரின் உருவம் பதிவான வீடியோ காட்சிகளையும் போலீசாரிடம் வழங்கினார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.
நடிகர் வடிவேலு நடித்த சினிமா படபாணியில் மோட்டார் சைக்கிளை ஓட்டி பார்ப்பதாக கூறி திருடிச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.