< Back
மாநில செய்திகள்
தொட்டபெட்டா சிகரத்தில் தேசியக்கொடி ஏந்தி ராணுவ குழுவினர் உற்சாகம்
நீலகிரி
மாநில செய்திகள்

'தொட்டபெட்டா' சிகரத்தில் தேசியக்கொடி ஏந்தி ராணுவ குழுவினர் உற்சாகம்

தினத்தந்தி
|
28 Aug 2023 2:30 AM IST

தமிழகத்தில் உயர்ந்த மலைச்சிகரமான தொட்டபெட்டாவில் ராணுவ குழுவினர் தேசியக்கொடியை கையில் ஏந்தி உற்சாகம் அடைந்தனர். அவர்களுக்கு சுற்றுலா பயணிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

ஊட்டி

தமிழகத்தில் உயர்ந்த மலைச்சிகரமான தொட்டபெட்டாவில் ராணுவ குழுவினர் தேசியக்கொடியை கையில் ஏந்தி உற்சாகம் அடைந்தனர். அவர்களுக்கு சுற்றுலா பயணிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

ராணுவ குழு வருகை

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதை அடுத்து, மத்திய, மாநில அரசுகள் சார்பில் கடந்த ஓராண்டிற்கும் மேலாக சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஹர் ஷிகர் திரங்கா என்ற பெயரில் இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்தின் மிக உயரமான இடத்தில் தேசியக்கொடியை ஏற்ற திட்டமிடப்பட்டது. தொடர்ந்து எவரெஸ்ட் சிகரத்தில் 3 முறை ஏறி சாதனை படைத்த கர்னல் ரன்வீர் சிங் ஜாம்வால் தலைமையில் 15 பேர் அடங்கிய ராணுவ குழுவினர் நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இதையடுத்து கடந்த மே மாதம் அருணாச்சலப்பிரதேசத்தில் முதலாவது பயணம் தொடங்கப்பட்டது. இந்தநிலையில் 19-வது மாநிலமாக தமிழகத்தில் மிக உயரமான சிகரமான 2,623 மீட்டர் உயரத்தில் உள்ள நீலகிரி மாவட்டம் ஊட்டி தொட்டபெட்டாவுக்கு ராணுவ குழுவினர் நேற்று வருகை தந்தனர்.

தேசியக்கொடியை ஏந்தினர்

தொடர்ந்து தொட்டபெட்டா சிகரத்தில் கர்னல் ரன்வீர் சிங் ஜாம்வால் தலைமையிலான ராணுவ வீரர்கள் தேசியக்கொடியை கையில் ஏந்தி அசைத்தனர். அப்போது தேசியக்கொடிகளை உயர்த்தியபடி, தேசபக்தி பாடல்களை பாடினர். இதைத்தொடர்ந்து 20-வது மாநிலமாக கேரளா மாநிலத்தில் உள்ள ஆனைமுடி சிகரத்திற்கு அந்த குழுவினர் புறப்பட்டு சென்றனர். இறுதியாக வருகிற அக்டோபர் மாதம் சிக்கிமில் உள்ள ஜாங்சாங் மலையில் ராணுவ குழுவினரின் பயணம் முடிவடைய உள்ளது.

ராணுவ குழுவின் இந்த முயற்சிக்கு அங்கு வந்த சுற்றுலா பயணிகள் வாழ்த்து தெரிவித்ததுடன், அவர்களுடன் செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு மகிழ்ச்சி அடைந்தனர். முன்னதாக ராணுவ குழுவினரை வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு அமைப்பின் தலைவர் சாதிக், வனத்துறை மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரிகள் வரவேற்றனர். தோடர் இன பெண்களும் தேசபக்தி பாடல்களை பாடி வரவேற்றனர்.

மேலும் செய்திகள்