செங்கல்பட்டு
கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் அடுத்தடுத்து தொடர் வழிப்பறி சம்பவங்களால் பரபரப்பு
|கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் அடுத்தடுத்து நடந்த தொடர் வழிப்பறி சம்பவங்கள் குறித்து தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் விசாரணை நடத்தினார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 33). இவர் குன்றத்தூர் பகுதியில் தங்கி கிரேன் ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார். சக்திவேல் நேற்று அதிகாலை வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் புறநகர் புதிய பஸ் நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த போது, 2 வாலிபர்கள் அவரை வழிமறித்து கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு, செல்போன், பணத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதே போல மதுரையை சேர்ந்த கார்த்திக் (25), என்பவர் நேற்று காலை கூடுவாஞ்சேரி சீனிவாசபுரம் அருகே போஸ்டர் ஒட்டிக் கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் கத்தியால் வெட்டிவிட்டு அவரிடமிருந்து செல்போனை பறித்து சென்றனர். இதில் பலத்த காயமடைந்த கார்த்திகை பொதுமக்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
மேலும், நேற்று முன்தினம் மறைமலைநகர் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த எலக்ட்ரீசியனை கத்தியால் வெட்டி விட்டு அவரிடமிருந்து மோட்டார் சைக்கிள் செல்போன் பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு 3 பேர் தப்பி ஓடி விட்டனர்.
இதனைப் பற்றி தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் கூடுவாஞ்சேரி, கிளாம்பாக்கம் ஊரப்பாக்கம் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சியின் அடிப்படையில் வழிப்பறி கொள்ளையர்களை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அடுத்தடுத்து மோட்டார் சைக்கிள்களில் சாலையில் செல்லும் நபர்களை கத்தியால் வெட்டிவிட்டு செல்போன், பணம் பறிக்கும் சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவங்கள் பற்றி தகவல் அறிந்த தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் நேற்று திடீரென கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்திற்கு வந்து அடுத்தடுத்து நடைபெற்ற வழிப்பறி சம்பவங்கள் குறித்து போலீசாரிடம் விசாரித்தார். பின்னர் கொள்ளையர்களை 24 மணி நேரத்திற்குள் பிடிக்க வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்டார்.