விழுப்புரம்
தமிழ்மொழியின் தொன்மை, தனித்துவத்தை அறிந்துகொள்ள வேண்டும்
|இன்றைய தலைமுறை இளைஞர்கள் தமிழ்மொழியின் தொன்மை, தனித்துவத்தை அறிந்துகொள்ள வேண்டும் கலெக்டர் பழனி அறிவுரை
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் தமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழாவை முன்னிட்டு நேற்று காலை விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கலெக்டர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட இப்பேரணியை மாவட்ட கலெக்டர் சி.பழனி, கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், தமிழ்மொழியின் சிறப்பு மற்றும் தனித்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இப்பேரணி தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்மொழியின் தொன்மை, தனித்துவம் மற்றும் சிறப்பு குறித்து இன்றைய தலைமுறை இளைஞர்கள் நன்கு அறிந்துகொள்ள வேண்டும். தமிழ்மொழியை அனைவரும் கற்க வேண்டும். தாய்மொழியான தமிழ்மொழியில் நாம் கல்வி பயிலும்போது உள்ளார்ந்த கருத்துடன் கல்வி பயில இயலும் என்றார்.
இப்பேரணியானது நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று விழுப்புரம் நான்குமுனை சந்திப்பில் முடிவடைந்தது. இதில் அரசு அலுவலர்கள், பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் மாணவர்களிடம் தமிழ்மொழியில் கையொப்பமிட வேண்டும், தமிழ்மொழியில் பெயர் பலகை வைத்திட வேண்டும் போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ- மாணவிகள் கலந்துகொண்டு பேரணியாக சென்றனர். இதில் தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் சத்தியப்பிரியா, விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி முதல்வர் சிவக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.