மதுரை
திராவிட மாயையில் அகப்பட்ட மக்களை மீட்பதே பாதயாத்திரையின் நோக்கம்-மேலூரில் அண்ணாமலை பேச்சு
|திராவிட மாயையில் அகப்பட்ட மக்களை மீட்பதே தனது பாதயாத்திரையின் நோக்கம் என மேலூரில் அண்ணாமலை பேசினார்
திராவிட மாயையில் அகப்பட்ட மக்களை மீட்பதே தனது பாதயாத்திரையின் நோக்கம் என மேலூரில் அண்ணாமலை பேசினார்.
மேலூரில் பாதயாத்திரை
பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளும் "என் மண்-என் மக்கள்" பாத யாத்திரை நேற்று மதுரை மாவட்டத்தை அடைந்தது. நேற்று மேலூர் அரசு கலைக்கல்லூரியில் காலை 10.15 மணியளவில் பாதயாத்திரை தொடங்கியது. அண்ணாமலைக்கு மேள-தாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.
சந்தைப்பேட்டை, பெரிய கடை வீதி, நகைக்கடை பஜார், திரவுபதி அம்மன் கோவில், சிவன் கோவில், செக்கடி தெரு, மதுரை மெயின் ரோடு, பேங்க் ரோடு, காந்தி பூங்கா, நொண்டி கோவில் சாலை, சேனல் ரோடு வழியாக மேலூர் பஸ் நிலையம் வந்தடைந்தார். பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அண்ணாமலை பேசியதாவது:-
தமிழக மக்கள் நல்லவர்கள், வல்லவர்கள். ஆனால், திராவிட மாயையில் அகப்பட்டு கிடக்கிறார்கள். அவர்களை மீட்பதே பாதயாத்திரையின் நோக்கம். தி.மு.க. கூறும் பொய்களை தோலுரித்து காட்டிவருகிறோம்.
நேர்மை என்றால் கக்கன்
மதுரையில் தென்மையாக இருக்கக்கூடிய கிராமங்களின் தாய் கிராமமாக இருப்பது மேலூர் என கூறுவார்கள். விவசாயத்திற்கு பெயர் பெற்ற ஊர். இந்த ஊரில் தயாரிக்கும் ஏர் கலப்பை தமிழகம் முழுவதும் செல்லும்.
தமிழகத்தில் நேர்மையான, மிக சிறந்த ஆற்றல் மிகுந்த அரசியல்வாதியான கக்கனை அறிமுகப்படுத்தியது மேலூர்தான். ஆனால், தற்போதுள்ள அமைச்சர் கரூர் பாலாஜி, கக்கனுக்கு நேர் எதிரானவர்.
நீதிமன்றத்தில் தீர்ப்பு வரும் வரை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தப்பித்து, தனியார் மருத்துவமனைக்கு சென்றவர் செந்தில்பாலாஜி. அப்படி என்றால் அரசு டாக்டர்களும்,, அரசு மருத்துவமனையும் சரியில்லையா என்ற கேள்வி எழுகிறது. ஆனால், கக்கன் வாழ்நாள் முழுவதும் அரசு மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற்றார்.
90 சதவீத மானியம்
மோடியின் ஆட்சியில் விவசாயிகளுக்கு பல மானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 45 கிலோ எடை கொண்ட உர மூடை ரூ.260 இருக்கும். ஆனால், அதன் உண்மையான விலை ரூ.2200. மோடி அரசு, கிட்டத்தட்ட 90 சதவீத மானியத்துடன் உரங்களை விவசாயிகளுக்கு கொடுத்து வருகிறது. இந்தியாவிற்கு தேவையான உரமானது, 80 சதவீதம் உக்ரைன், ரஷியா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
2026-க்கு பின்னர் 100 சதவீத உரத்தையும் இந்தியாவே தயாரிக்கும் என மோடி கூறியிருக்கிறார். பெட்ரோலுக்கு அடுத்தபடியாக அதிகப்படியாக செலவிடுவது உரத்திற்காகத்தான்.
உரத்திற்கு கொடுக்கப்படும் மானியம் என்பது கடந்த 3 ஆண்டுகளில் ரூ.3 லட்சத்து 68 ஆயிரத்து 676 கோடி ஆகும். இதனை மத்திய அரசு விவசாயிகளுக்கு கொடுத்து வருகிறது.
பெண்களுக்கு தி.மு.க. மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக கூறியிருப்பதற்கு ரூ.7 ஆயிரம் கோடி செலவிடுகிறது. ஆனால், மத்திய அரசு உரத்திற்காக கொடுப்பது ரூ.3 லட்சம் கோடி. தி.மு.க. பெண்களுக்கு கொடுப்பதாக கூறியிருக்கும் பணமும், மத்திய அரசின் பணம்தான். மத்திய அரசின் பணத்தை மடைமாற்றி கொடுக்கிறது. எனவே எந்த அரசு மக்களுக்காக வேலை செய்கிறது, என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
மதுரை எம்.பி.
மதுரை தொகுதியின் எம்.பி. வெங்கடேசன், விளம்பரங்களிலும், புத்தக வெளியீட்டு விழாவிலும் மட்டுமே இருக்கிறார். கன்னியாகுமரி வரை ராகுல்காந்தி மாஸ் என்றும், கேரளா சென்று விட்டால் ராகுல்காந்தி டம்மி எனவும் கம்யூனிஸ்டுகாரர்கள் கூறுகிறார்கள்.
முல்லை பெரியாறு பிரச்சினை, மருத்துவ கழிவுகளை கொட்டுவது உள்ளிட்டவற்றில் 2 மாநில கம்யூனிஸ்டு கட்சிக்காரர்களும் மக்களை ஏமாற்றுகிறார்கள்.
ரேஷன் கடையில் வினியோகிக்கப்படும் அரிசி கிலோவுக்கு 32 ரூபாயை மத்திய அரசு கொடுக்கிறது. 2 ரூபாயை மட்டுமே தமிழக அரசு கொடுக்கிறது. ஆனால் கடைகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்தை வைக்கிறார்கள். அப்படி எனில் 100 சதவீதம் தமிழக அரசின் நிதியில் இயங்கும் டாஸ்மாக் கடைகளில் முதல்- அமைச்சரின் படம் வைக்காதது ஏன்?
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் ரூ.1.75 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டு உள்ளது. அதற்கு தி.மு.க. அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் விளக்கம் கொடுத்துள்ளார். அவர் உண்மையை பேசியதால் அவரின் துறை பறிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கள்ளுக்கடைகளை மீண்டும் திறக்க வேண்டும்.
அமைச்சர் மூர்த்தி
செந்தில் பாலாஜியை போல் அமைச்சர் மூர்த்தி மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். என் குலதெய்வத்தின் மீது ஆணையாக எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
நடைபயணத்தில் பா.ஜனதா, மாநில பொதுச்செயலாளர் ராம.சீனிவாசன், மாவட்ட ஆன்மிக ஆலய பாதுகாப்பு குழு தலைவர் தர்மலிங்கம், நகர் மண்டல் தலைவர் சேவுகமூர்த்தி, மாவட்ட பொதுச்செயலாளர் வக்கீல் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.