தொழிலாளர்களின் நலன், பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் ஒப்பந்தம் இருக்கவேண்டும் - சீமான்
|ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை,
காஞ்சிபுரத்தில் சாம்சங் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரிந்துவரும் தொழிலாளர்கள், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 9-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது;
"சாம்சங் நிறுவனத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் அரசு, போராடும் தொழிலாளர்களின் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும். போராட்டக்காரர்களை கைது செய்வதை நிறுத்த வேண்டும். உரிமைக்காக போராடும் தொழிலாளர்கள் போராடக்கூட இடமில்லாமல் காட்டுப் பகுதியில் வந்து போராடும் நிலை உருவாகியுள்ளது.
தொழிலாளர்களின் நலன், பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் ஒப்பந்தம் இருக்கவேண்டும். தொழிலாளர் நலன், பாதுகாப்பிற்கு தொழிற்சங்கங்களை அமைக்க வேண்டும். தொழிற்சங்கத்தின் மூலம்தான் ஊதியம் நிர்ணயிக்கப்பட வேண்டும். தொழிலாளர் நலன் சார்ந்து எடுக்கும் முடிவுக்கு நிறுவனங்கள் கட்டுப்பட வேண்டும். இதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்." என்றார்.