< Back
மாநில செய்திகள்
காதல் மனைவி இறந்த வேதனை: குளுக்கோசில் விஷ ஊசி... அரசு டாக்டர் எடுத்த விபரீத முடிவு
மாநில செய்திகள்

காதல் மனைவி இறந்த வேதனை: குளுக்கோசில் விஷ ஊசி... அரசு டாக்டர் எடுத்த விபரீத முடிவு

தினத்தந்தி
|
14 July 2024 6:44 AM IST

காதல் மனைவி தூக்குப்போட்டு இறந்த வேதனையில் இருந்த அரசு டாக்டர், இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

சேலம்,

சேலம் அம்மாபேட்டை ஸ்ரீவாரி கார்டன் அருகே உள்ள வாய்க்கால்பட்டறை பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மகன் இனியன் (வயது 32). இவர் தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள கலிங்கப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வந்தார். சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் செங்கோட்டுவேல். இவருடைய மகள் சவுமியா (31). டாக்டர் இனியனும், சவுமியாவும் காதலித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கணவன், மனைவி இருவரும் திருவேங்கடத்தில் வசித்து வந்தனர். இனியன் மருத்துவ பயிற்சிக்காக வெளியூர் செல்ல வேண்டி இருந்தது. அப்போது சவுமியா யார் வீட்டில் தங்குவது? என்று அவர்களுக்குள் கடந்த 6-ம்தேதி இரவு தகராறு ஏற்பட்டது.

பின்னர் சவுமியா இரவு தனி அறைக்கு சென்று உள் பக்கமாக பூட்டிக்கொண்டார். மனைவி இரவு தூங்க சென்று விட்டாள் என்று நினைத்த இனியன் வேறு அறையில் இரவு தூங்கி உள்ளார். பின்னர் மறுநாள் வெகுநேரமாகியும் அறையின் கதவு திறக்காததால் அங்கிருந்தவர்கள் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது சவுமியா மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.

மனைவி இறந்த சோகத்தில் இருந்த இனியனும் அன்றைய தினமே வெற்று ஊசியை உடலில் செலுத்தி தற்கொலைக்கு முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டார். அதன்பிறகு சேலத்தில் உள்ள அவரது வீட்டிற்கு வந்தார். இந்த நிலையில் கடந்த 10-ம்தேதி தனது வீட்டில் 2-வது முறையாக விஷமாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்று உள்ளார். தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு அவரது அறையில் தூங்க சென்றார். நேற்று காலை வெகுநேரம் ஆகியும் அறை கதவு திறக்கப்படாததால் பெற்றோர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது மகன் கையில் ஊசி செலுத்தி இறந்து கிடந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இனியன் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடலை டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். அப்போது அவர் குளுக்கோஸ் பாட்டிலில் விஷ ஊசி செலுத்தி பின்னர் அந்த குளுக்கோசை தனது உடலில் 'டிரிப்ஸ்' மூலம் செலுத்தி தற்கொலை செய்து கொண்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்