அக்னிபத் திட்டம் நாட்டின் பாதுகாப்பில் விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் - சீமான் எச்சரிக்கை
|அக்னிபத் திட்டம் நாட்டின் பாதுகாப்பில் விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
சென்னை,
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நான்கு ஆண்டுகளுக்கு மட்டுமே பணியெனும் அடிப்படையில், இந்திய இராணுவத்தின் முப்படைகளுக்கு ஆள்சேர்க்கக் கொண்டுவரப்பட்டுள்ள 'அக்னிபத்' எனும் புதிய நடைமுறையானது நாடெங்கிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிற நிலையில், அதன் விளைவுகளை எண்ணிப்பார்க்கையில் பெரும் அச்சத்தைத் தருகின்றது. எட்டு ஆண்டுகால பாஜகவின் அரசாட்சியில் கொண்டுவரப்பட்ட பேரழிவுத் திட்டங்களுக்கெதிராக மக்கள் போராடும்போதெல்லாம், எல்லையில் நிற்கும் இராணுவ வீரர்களை நோக்கிக் கைகாட்டி, மக்களின் வாயடைக்க முயன்ற பாஜகவின் ஆட்சியாளர் பெருமக்கள், தற்போது இராணுவ வீரர்களின் மதிப்பையே குலைக்கும் வகையில் திட்டம் தீட்டியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
இந்திய இராணுவத்தில் சேர உரிய கல்வித்தகுதியும், உடற்தகுதியும் இருந்தால், 17.5 வயது முதல் 21 வயது வரையிலான இருபாலரும் முப்படைகளில் சேரலாம்; ஆனால், அவர்களது பணிக்காலம் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகளென நிர்ணயம் செய்யப்பட்டு, பணிக்காலம் முடிந்ததும் 11 – 12 இலட்ச ரூபாய் நிதியுதவியோடு 75 விழுக்காட்டினர் வெளியேற்றப்படுவார்கள் என ஒன்றிய அரசு அறிவித்திருப்பது மோசமான நிர்வாக முன்முடிவாகும். நாட்டின் எல்லையைக் காக்க வேண்டுமெனும் அர்ப்பணிப்புணர்வோடும், தியாக மனப்பான்மையோடும் படைகளில் சேரும் இளைஞர்களைப் பணத்தைக் கொடுத்து நிறைவுறச்செய்து, நான்கே ஆண்டுகளில் வெளியேற்ற முனைவது மிகத்தவறான நடைமுறையாகும்.
முப்படைகளில் சேருவதை நாட்டுக்கு ஆற்றும் பெருந்தொண்டெனக் கருதி, இலட்சக்கணக்கான இளைஞர்கள் இராணுவத்தில் பணிபுரிய பயிற்சியும், முயற்சியும் எடுத்துக்கொண்டிருக்கையில், அவர்களது கனவினைப் பொசுக்கும் வகையில் ஒன்றிய அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பு இராணுவப்பாதுகாப்பு நடவடிக்கையில் ஏற்பட்டிருக்கிற மிகப்பெரும் சறுக்கலாகும். ஏற்கனவே, நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடும் சூழலில், இராணுவத்தில் சேரும் இளைஞர்களையும் தனியார் நிறுவனம் போல ஒப்பந்த அடிப்படையில் பணிக்குச் சேர்த்து, நான்கு ஆண்டுகளில் 25 வயதிற்குள்ளேயே வெளியேற்றுவது ஒன்றிய அரசின் தொலைநோக்கற்ற குறுகிய மனப்பான்மையையே காட்டுகிறது. இராணுவப்பணியிலிருந்து விடுவிக்கப்படும் இளைஞர்கள் வேலையற்றவர்களாக மாறுவதோடு, வயதுமூப்பினால் கல்வியைத் தொடர முடியாமல் போவதால் அவர்களது உயர் கல்வி முழுமையாகப் பாதிக்கப்படும் சிக்கலுண்டு.
இராணுவப் பயிற்சிபெற்று, அத்துறையில் பெரும் நாட்டம் கொண்டு நிற்கும் இளைஞர்களை இளம் வயதிலேயே அப்பணியிலிருந்து வெளியேற்றும்போது, அவர்களிடையே இது விரக்தி மனநிலையை ஏற்படுத்துவதோடு, அவர்களைத் தவறானப்பாதைக்கு இட்டுச்செல்லும் பேராபத்தும் உண்டு. அவ்வாறு செல்கிறபட்சத்தில், அவர்கள் நாட்டின் பாதுகாப்புக்கே எதிரானவர்களாக மாறி, விபரீத விளைவுகளை ஏற்படுத்திவிடவும் கூடும்.
இத்திட்டத்தைக் கண்டித்து, பீகார், அரியானா, ஜார்கண்ட், இராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் கொதித்தெழுந்து போராடி வருவதன் விளைவாக, வன்முறை வெடித்து, பல்வேறு மாநிலங்களில் பொதுச்சொத்துகள் சேதப்படுத்தப்படும் நிலையிலும் பாஜகவின் ஆட்சியாளர் பெருமக்கள் கள்ளமௌனம் சாதித்து, நாட்டில் நிலவும் கலவரச்சூழலையும் அமைதியாக வேடிக்கைப் பார்த்து நிற்பது வெட்கக்கேடானது. ஒன்றிய இணை அமைச்சரின் மகன் விவசாயிகள் மீது வாகனத்தை ஏற்றிக்கொன்றாலும், நாடெங்கிலும் மக்கள் உரிமைகளுக்காகப் பெருந்திரளாகப் போராடினாலும், நாடு அசாதாரணச்சூழலை எதிர்கொண்டு, இந்தியாவின் ஓர்மை குறித்தானப் பெருமைகள் தகர்ந்துபோய், பன்னாட்டரங்கில் சந்தி சிரித்தாலும் எவ்விதக் கவலையுமற்று நிற்கும் இந்நாட்டின் ஆட்சியாளர்களான பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரது செயல்பாடுகள் இந்நாட்டின் சாபக்கேடாகும்.
இராணுவத்தின் ஓய்வுதியச்செலவுகளைக் குறைத்து, நாட்டின் நிதியாதாரத்தை மிச்சப்படுத்துவதுதான், 'அக்னிபத்' திட்டத்தின் முதன்மை நோக்கமென்று ஆட்சியாளர் பெருமக்களால் கற்பிக்கப்படும் காரணங்கள் அபத்தமானவையாகும். எட்டு ஆண்டுகால கொடுங்கோல் ஆட்சியில் நாட்டின் பொருளாதாரத்தைச் சீரழித்து, தனிப்பெரும் முதலாளிகளுக்கு சலுகைகளையும், வரிவிலக்குகளையும் வாரிவழங்கி, பணவீக்கத்தை அதிகப்படுத்தி, விலைவாசி உயர்வைக் கட்டற்ற உயர்நிலைக்குக் கொண்டு சென்று, எளிய மக்களை நாளும் பெரும் இன்னல்களுக்கு ஆளாக்கி வரும் ஒன்றியத்தை ஆளும் பாஜகவின் ஆட்சியாளர்கள், இராணுவச்செலவினங்களைக் குறைப்பதாகக் கூறுவது கேலிக்கூத்தாகும்.
நாட்டின் இறையாண்மை, எல்லைப்பாதுகாப்பு எனும் மதிப்பிட முடியாத அதிமுதன்மைத்துவம் வாய்ந்தவைகள் குறித்து மிக முக்கிய முடிவெடுக்கும்போது பொருளாதாரச் செலவினக்குறைப்பை அளவுகோலாக வைப்பதென்பது நாடு குறித்து துளியும் அக்கறையற்ற மடமைத்தனமாகும். 'நாடு, நாடு' என்றுகூறி, நாளும் அரசியல் செய்திடும் ஒன்றிய அரசாட்சியின் பெருமக்கள், நாட்டைக் காக்கிற இலட்சணத்தை இத்திட்டமொன்றே மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தும் என்பது உறுதி.
ஆகவே, நாட்டில் நிலவும் அசாதாரணச்சூழலை முடிவுக்குக் கொண்டு வர, இந்திய இராணுவத்திற்கு ஆள்சேர்க்கும் பணிக்குக் கொண்டு வந்திருக்கும், 'அக்னிபத்' எனும் புதிய முறையை உடனடியாகக் கைவிட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.