விழுப்புரம்
அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை:அமலாக்கத்துறையின் நடவடிக்கை சட்டப்படியே நடக்கிறதுபா.ஜ.க. மாநில செயலாளர் பேட்டி
|அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை அமலாக்கத்துறையின் நடவடிக்கை சட்டப்படியே நடக்கிறது பா.ஜ.க. மாநில செயலாளர் தொிவித்தாா்.
பாரதீய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் விழுப்புரத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில செயலாளர் மீனாட்சி நித்யசுந்தர் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். கூட்டம் முடிந்ததும் அவர், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைப்பது பிரச்சினையாக மாறியிருக்கிறது. 2017-க்கு பிறகு காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைத்த பிறகு சொற்பமாக கிடைக்கக்கூடிய தண்ணீரும் தற்போது வரவில்லை. ஏனெனில் கர்நாடகாவில் காங்கிரஸ், ஆட்சியில் அமர்ந்திருக்கிறது. கடந்த பா.ஜ.க. ஆட்சிக்காலத்தில் உரிய நதிநீர் பங்கீட்டை வழங்கி வந்தனர். அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு காங்கிரஸ் அரசு பொறுப்பேற்றதும் நமக்கான காவிரி நீரை வழங்காமல் புறக்கணிக்கின்றனர்.
காவிரி நதிநீர் விவகாரத்தில் தி.மு.க. அரசு கைவிட்டாலும் பா.ஜ.க.வும், மத்திய அரசும் கைவிடாது. விவசாயிகளின் நலன்தான் பா.ஜ.க.வுக்கு முக்கியம். அதற்காக எந்த நிலையிலும் துணை நிற்கும்.
அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி விவகாரத்தில் அமலாக்கத்துறையின் நடவடிக்கை சட்டப்படியே நடக்கிறது. புகார் இருப்பதால்தான் அதற்கான முகாந்திரம் உள்ளதால்தான் நடவடிக்கையை எடுத்துள்ளனர். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ரெய்டு நடக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட தலைவர்கள் கலிவரதன், ராஜேந்திரன், மாவட்ட துணைத்தலைவர் கோகுல், மாவட்ட நிர்வாகிகள் சதாசிவம், முரளி, தங்கம், குமாரசாமி, ஜெய்சங்கர், வெங்கடேசன், எத்திராஜ், சரவணன் உள்பட பலர் உடனிருந்தனர்.